முதுமையைப் போற்றுவோம்...! - 3
வாழ்வின் வழிகாட்டிகள் பட்டறிவின் பரிசுகள்
தன்னலம் அரிதாம் குடும்பநலம் பெரிதாம்
தியாகத்தின் வாழ்வாம் பிரச்சினைகளுக்குத் தீர்வாம்
தமக்கெனவே வாழாமல் நமக்கெனவே வாழ்ந்திடுவர்
பாட்டிமார் கதைகளில்லை பண்பாடு கெட்டுப்போச்சு
தாத்தாக்கள் விளையாட்டில்லை அன்பெல்லாம் வெறும்பேச்சு
குருவிக்கூடாயிருந்த குடும்பம் குண்டுபோட்டுக் கலையலாச்சு
கூட்டுக்குடும்பம் தகர்ந்ததாலே குற்றங்கள் பெருகலாச்சு
அலைப்பேசி வாழ்க்கையிலே மகிழ்ச்சியெல்லாம் நெடியதூரம்
அலைந்தலைந்து ஓடுகிறோம் வாழ்க்கையே மிக்கபாரம்
முதியவர்கள் ஏங்குகிறார்கள் பேசுவதற்கெங்கே நேரம்
அவர்களை உதறிவிட்டால் வாழ்விலிருக்குமா சாரம்
முதியோரின் ஏக்கத்தை இளையோர்நாம் உணர்ந்திடுவோம்
அவர்களின் தியாகத்தை என்றென்றும் மதித்திடுவோம்
நமக்கு வாழ்வளிக்க வசந்தங்கள் இழந்தவர்கள்
நம்மை ஏற்றிவிட ஏணியாய்க் கீழிருந்தவர்கள்
முதியோரில்லங்கள் வேண்டாமே மூடுவிழா நடத்துவோம்
அடுத்த தலைமுறைக்கு அவர்தம் பெருமைகளைக் கடத்துவோம்
மதிக்காத மக்களைச் சொல்லிநாமும் திருத்துவோம்
முதியோரைப் போற்றி குடும்பஅமைப்பை நிலைநிறுத்துவோம்
அறநெறிப் பண்புகளாலே முதுமையினைப் போற்றிடுவோம்
நடமாடும் தெய்வங்களுக்கு காலடிமலர்கள் சாற்றிடுவோம்
குழந்தையாய் எண்ணி அவரின் தேவைகளை ஆற்றிடுவோம்
நாமும் முதியோராவோமென்ற பக்குவத்தைப் பெற்றிடுவோம்!
- கவிஞர் மு. வா. பாலாசி, தேனி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.