முதுமையைப் போற்றுவோம்...! - 31

காலத்தின் பூரணம்
ஞானத்தின் தோரணம்
வாழ்க்கைக் கடலைக்
கடக்க உதவும்
அனுபவப்படகு முதுமை
சொல்லிக் கொடுக்கவும்
அன்பை அள்ளிக் கொடுக்கவும்
தவறைத் தட்டிக் கேட்கவும்
கடவுள் கொடுத்த பரிசு
வழிகாட்டும் கலங்கரை வயோதிகம்
சுருக்கங்கள் ஒவ்வொன்றும்
வெற்றியின் தழும்புகள்
சாதனையின் சுவடுகள்
மழலையின் மறுவடிவம்
மாசில்லாப் புதுவடிவம்
அமுதம் ததும்பும் சொற்களால்
நிறையும் பொக்கை வாய்
உன் காதோரம் தண்டட்டி
நீ வாழ்ந்த கதை சொல்லும்
நீ வெத்திலை இடிக்கும் சத்தம் கேட்டு
வெண்ணிலவும்தான் மயங்கும்
ஒத்தையிலே நின்னுப்புட்டா
ஊருக்கே யானை பலம்
உன் சுருக்குப்பை உள்ளேதான்
உலக வங்கியே ஒளிந்திருக்கும்
அப்பா ஆத்தா காசு தர ஆயிரம் யோசனை பண்ணுவாங்க
அப்பத்தா நீ எப்ப காசு கேட்டாலும் அள்ளி அள்ளித் தந்திடுவாய்
தள்ளாத வயதிலும் தாத்தா தோள்மேலே ஏறிக்கொண்டு
திருவிழா பார்ப்போமே அது தனி அழகு
கிளப்பு கடையிலே சீனி மிட்டாய் வாங்கி
மப்பு தீரும் வரை மடிவிட்டு இறக்காமல்
அன்புள்ளம் கொண்டவர் அய்யா நீ பெரியவரே
உன் கதையை நான் கேட்க, கண்ணெல்லாம் குளமாக
நீ வளர்ந்த கதையைச் சொல்லவா? வாழ்ந்த கதையைச் சொல்லவா?
ஊர் உலகம் உனக்கு உறவான கதையைச் சொல்லவா?
ஊருக்கு ஒரு பிரச்சனையின்னா முதலில் நிற்பது நீதானே!
நாதியற்ற மக்களுக்குக்கெல்லாம் ஜோதியானவன் நீதானே!!
கைபிடித்துக் கூட்டிப் போவேன்
நீ ஆசைப்பட்ட இடத்திற்கெல்லாம்
நீ கேட்டதெல்லாம் வாங்கித்தருவேன்
உன்னைப் போல பெருசுகளும் எனக்கு சொந்தம் தானே
முதுமைக்கு உள்ள ஜீவன் இருக்கு அது நம்ம பந்தம் தானே
வாழ்ந்த மனுசங்களை வாழ்த்துவோம்!
வசந்தம் பெருகவேப் போற்றுவோம்
- யாழ் எஸ். ராகவன், இராயப்பன்பட்டி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.