முதுமையைப் போற்றுவோம்...! - 33
இலையற்றுப் போனேன்
இனி
அடுத்த வேளை உணவுக்கு
என்ன செய்வேன்?
புறக்கணிப்பின் உந்துதலில்
புரண்டு புரண்டு
இல்லாமையின் பள்ளம் நோக்கி
பாய்ந்து ஓடுகிறேன்
இனி
எங்கு ஓய்வெடுப்பேன்?
வெந்து வெந்து
பதார்த்தங்களைப் பரிமாறிவிட்டு
கண்ணீர் மண்ட
சுவாலையின் மூச்சடங்கி
பரிதவித்து
அணைந்து கிடக்கிறேன்
இனி
என் பசியை யார் பகிர்வார்?
இயலாமையின் பாலைவனத்தில்
இலக்கற்று
அலைக்கழிக்கப்பட்டு
கசப்பின்
தண்ணீர்த் துரவு அண்டையில்
நிர்கதியாய்
நிலை குலைந்து நிற்கிறேன்
இனி
என் உயிரை யார் தப்புவிப்பார்?
- வசந்ததீபன், போடிநாயக்கனூர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.