முதுமையைப் போற்றுவோம்...! - 34
உயிராய் உடலாய் கருவில் சுமந்து - என்னை
உலகிற்குக் கொண்டு வந்த அன்னையே!
உதிரத்தை அமுதாக்கி உணவாய் தந்து - என்னை
தாலாட்டி சீராட்டி பாராட்டிய தாயே!
அன்பும் பண்பும் பாசமும் நேசமும் - எனக்கு
ஊனிலும் உயிரிலும் ஊட்டிய நல்லவளே
வறுமையிலும் வண்ண வண்ண ஆடையெடுத்து - எனக்கு
அணிவித்து அழகு பார்த்த தேவதையே!
எனக்கு ஒன்றென்றால் தனக்கென்று வந்ததாய் - எனக்காக
உன்னையே வருத்திக் கொண்ட தோழியே!
உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து - என்னை
வாழ்வின் உயரத்தில் நிறுத்தியுள்ள உத்தமியே!
எனக்குப் பிடித்தவள் உனக்குப் பிடிக்கவில்லை - எனக்காக
அவளையே மருமகளாக ஏற்ற தியாகியே!
துன்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டு - எனக்காக
இன்பத்தை மட்டும் கொடுத்த இனியவளே!
இரத்தமாய் சதையாய் எலும்பாய் நரம்பாய் - என்னோடு
நிறைவாய் நிறைந்து உயிராய் நிற்பவளே!
தவழ்ந்து மெல்ல மெல்ல நடக்கும் முதுமையிலும் - எனக்காக
உன்னை அர்ப்பணித்துக் கொண்ட தாய்மையே
உன்னை நான் போற்றுகின்றேன்
நீதான் எனக்கு அன்பு!
நீதான் எனக்கு கருணை!
நீதான் எனக்கு தெய்வம்!
- விடியல் வீரா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.