முதுமையைப் போற்றுவோம்...! - 34
மந்தமாய்த் தொடரும் அந்தகாரப் பொழுதுகள்
ஆர்வமில்லாமல் அலைக்கழிக்கும் வேதனையோடு…
படுக்கை யிலிருந்து பாய்க்கு மாறுதற்கும்
பக்க மிருப்பவர் தேவை யாகிறது
கால்கள் நடக்க ஆரம்பிக்கும் போதே
ஒன்றினொன்றாகப் பின்னிக் கொள்கிறது
முதுகும் பிடறியும் முறைதவறி பணிசெய்கிறது…
ஏகப் பிணிகளும் உடலை ஏடாய்
நினைத்து எழுதிப் போகிறது
மூச்சு விடவும் சொரணை இன்றி
நுரையீரல் கனத்துப் போகிறது
பேரன் பேத்திகள் மகன் மருமகளென
கூட்டுக் குடும்ப ஆசைதான்
உணவும் உறவும் பழிக்கும் வயதல்லவா?
தள்ளா முதுமைதான் தளிர்களின் வாழ்வை
தனிமையில் உணர்த்திப் போகிறது
தோளில் சுகமான சுமையென தூக்கித்
திரிந்த உறவுகள் தான்
இன்று உதாசீனப் பார்வைகளால் நெஞ்சை
வியர்க்க வைக்கிறது - அறிவுரைகள்
அர்த்தமற்று இருளைக் கண்ணிலும் மனதிலும்
ஊற்றிச் செல்கிறது நஞ்சினைப்போல்…
- முனைவர் பி.வித்யா, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.