முதுமையைப் போற்றுவோம்...! - 34

இளமழையைத் தினஞ்சுமந்த எழில்மேகம் தவழுகையில்
இளமையான பூங்காற்று இதயத்தை நனைக்கிறது
இளவேனில் பருவத்தில் இளந்தளிரை முகங்காட்ட
இளமைபோன இலைகளிங்கு இவ்வுலகை அணைக்கிறது
பத்தியத்தில் வாழ்ந்திடுவார் பட்டினியுங் கிடந்திடுவார்
பத்தினியாய்ப் பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்திடுவார்
இத்தரணி ஆள்வதற்கு இதயத்தை அளித்திடுவார்
முத்தமிழ்ப்பால் உனக்கூட்டி முதுமையினை அடைந்திடுவார்
எத்தனையோ வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டதாலே
அத்தனையுந் தாங்கிநின்ற அன்னைக்கு இனிக்குமடா
வித்தைகளைக் கற்கையிலே வேதனைகள் தெரிந்ததாலே
நித்திரையும் வரவில்லை நெஞ்சினிலே கலக்கமடா
அன்னமிட்ட அன்னையிங்கு அன்புசெய்த தந்தையிங்கு
பொன்னிலவாய் உனைவளர்த்துப் புன்னகையை இழந்துவிட்டார்
தன்மானம் சிதைந்திடாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்துவிட்டேன்
உன்வாழ்வில் இறுதிவரை ஊர்போற்ற வாழ்கயென்றார்
முதிர்ந்துபோன இலையிருந்தால் முழுவதுமாய் நிழல்கொடுக்கும்
உதிர்ந்துவிட்ட இலைகளெல்லாம் உரமாகி மண்செழிக்கும்
பழுத்தயிலை உதிருகையில் பசுங்கிளையும் நோகுமடா
செழித்தயிலை இதுபார்த்து சிந்தனையில் வாடுமடா
முதுமையான திருக்குறளில் முப்பாலை மறக்காதே
முதுமையான முத்தமிழை முடக்கிவிட நினையாதே
முதியோர்கள் இல்லத்தால் முதுமையினைப் பழிக்காதே
முதுமையான பெற்றோரின் முகவரியை மறக்காதே
- கவிஞர் வீக பொன்னையா, பாலையூர், புதுக்கோட்டை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.