முதுமையைப் போற்றுவோம்...! - 6
போற்றிப் பாடிடுவோம் நாமே,
முதுமையின் பெருமையைத் தானே,
அச்சு அசலாக நம்மைக் கொடுத்தாரே,
மச்சம் பிசகாமல் பெற்று வளர்த்தாரே!
உரிமைக்காய்,உறவுக்காய்,ஏற்றுக்கொள்வீரே,
பெரியோரை,முதியோரை,போற்றிக்கொள்வீரே,
நாசூக்காய் நாலு வார்த்தை பேசிவிடுவீரே,
நட்புடன் நன்றிக்கடனை செலுத்திடுவீரே!
பிறருக்காக பெரியோர்தனை தூற்றிவிடாதீர்,
பழைமையென முதியோர்களை ஒதுக்கிவிடாதீர்,
அறியாது அவர் செய்திடும் பிழைகளை நீரே,
நல்அன்புடன் அடக்கமாய் பொறுத்தருள்வீரே!
மூன்று தமிழ் வளர்த்த முன்னோர் எல்லாமே,
நன்றே வயதினில் மூத்த பெருமக்கள்தானே!
அவ்வையாரையும் பாரு,அகத்தியரையும் பாரு,
அவர்கள் நமக்கு தந்திடாத விசயங்கள் ஏது?
அண்ணல் மகாத்மாவின் உயர்வுதனைப் பாரீர்,
ஆபிரகாம் லிங்கனின் வெற்றிதனைக் காணீர்,
போராடியே செயித்திட்ட மண்டேலா பாரீர்,
முதியோர்கள் செய்திட்ட சாதனைகள் காணீர்!
பெரியோர்கள் என்பார் எல்லாம் இங்கே,
முன்னேறிக் காட்டிய முதியோர்கள் தானே!
மூத்தோர் சொல்தனைக் கேட்டிடுவோமே,
முதியோரை மறவாமல் போற்றிடுவோமே!
- க. சோ. இராசேந்திரன், அம்பலகாரன்பட்டி, மதுரை-107.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.