முதுமையைப் போற்றுவோம்...! - 7
தத்திதத்தி நடக்கும் கால்கள்
தடம்புரளும் காலம் முதுமை
பல்லும் சொல்லும் இல்லா
பச்சிங்குழந்தையின் வாசம் முதுமை
ஓடாய் உழைத்த கைகள்
ஓய்வெடுக்கும் நேரம் முதுமை
இளமை கொள்ளும் இயல்பின்றி
இறைவனின் திருவிளையாடல் முதுமை
முதுமையே அனைவருக்கும் பொதுமை
அதை நாம் மறப்பதேனோ?
பழமை பேசும் முதுமையென...
முரணோடு துள்ளுது இளமை.
அங்கம் தளரும் இளமையும்...
உருமாறும்
முதுமையென்பதை மறந்ததேனோ?
கருவில் சுமந்தவள் கலங்குகிறாள்
தோளில் சுமந்தவர் துவழ்கிறார்
கைகொடுக்காமல் ஒதுக்கிடுவது சரியோ?
அவர்களில்லாமல் பிறப்பேது நமக்கு
முதுமைக்கு முன் இளமை
முந்தி விடுகிறது சந்திக்கு
அறுதியிட்டு சொல்லவியலா ஆயுட்காலம்
அபரீதமான விஞ்ஞானத்தின் வளர்ச்சி
காலங்களைக் கடந்து வாழும்
காவல் தெய்வங்கள் முதுமை
நாம் காணாத காலங்களை
காவியமாக்கிடும் அவதார புருஷர்கள் - முதுமை
வருடும் கைகளை வாஞ்சையோடு
வாழ்த்தும் மகான்கள் முதுமை
முதுமையை பார்ப்பதே பெருமை
தனிமைப் படுத்துவது கொடுமை
தாங்கி பிடிப்பதே கடமை
முதுமையைப் போற்றுவோம் பெருமையோடு
- கவிதாயினி தி. இராஜபிரபா, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.