முதுமையைப் போற்றுவோம்...! - 8
இந்திய அரசின் தேசியக் கொள்கையும்
சிந்தித் தெழுதிய முதியோர் சட்டமும்
அறுபதைத் தாண்டிய அனைவரும் முதியோர்
பொறுப்புடன் காத்தல் நன்றெனக் கூறும்!
பிள்ளைகள் தம்மைப் பிரிந்து வாழ்தலும்
சள்ளையாய் வந்திடும் சர்க்கரை நோயும்
மறதி நோயும் மனத்தெளி வின்மையும்
உறவுகள் ஒதுக்கும் நிலமையும் எழலாம்
மூத்தோர் தம்மை முனைந்து காவாத்
தீத்திறம் படைத்த மகற்கு மூன்று
ஆண்டுகள் சிறையுண் டெனச்சட் டமுள்ளது
மாண்ட பெரியரோ முறையிடு வதில்லை
அரசு காப்பீட் டுத்திட் டங்களை
அறிவித் தவர்க்கே உதவி செய்யலாம்
முதியோ ரியலைப் பாடமாய் வைத்து
முதியோர் பேணும் பண்பை வளர்க்கலாம்
மனத்திற் கினிய தொழில்தந் திடலாம்
தினந்தினம் அமர்ந்து தியானம் செய்யலாம்
இனிய நூல்களை இயைந்து படிக்கலாம்
கனிவாய்ப் பேரரைக் கண்டு மகிழலாம்
முதியோர்க் கிறைச்சியை முற்றிலும் தவிர்க்கணும்
மதுவையும் புகைபிடித் தலையும் மறக்கணும்
சரிவீத உணவே சாலச் சிறந்தது
பரிவுடன் பாலைப் பருகச் செய்கவே!
- த. கருணைச்சாமி, தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.