நிழல் யாத்திரை
இதுவரைக்கும் தெரியவில்லை இதன் தூரம்.
அடுத்த சந்திப்பில் முடியலாம் அல்லது,
இன்னும் கொஞ்சம் நீளலாம்...
ஒரு மயக்கம், இன்னும் சொல்வதென்றால்;
இறுதி மூச்சை இறுகபிடித்திருக்கும் பெரும் சிரமம்.
வசிகர புன்னகைகள் வீசி வளைத்து போட்டவள்
கண்கள் உடைந்து விள கால்மாட்டில்
என் உயிர்கள் மெழுகாய் உருகின அருகில்.
நிமிஷங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேனா?
நிறம் பிரிக்க இயலாத ஒரு நெருடல்.
இப்போதெல்லாம் வியாதிக்கு, வியாதி
மாத்திரைகளும் மலிந்து விட்டன.
அளவோடு குடித்தால் உறக்கம் கொடுக்கும்
அதிகமானால் உயிரை எடுக்கும்.
சுற்றத்தினரின் சுக விசாரிப்பு
இளசுகளின் ஏளனப்புன்னகைகள்
மனசை வருடிவிடும் மயிலிறகுகளாய்
அரைவாசிக்கு மேல் தேறியதோர் திருப்தி.
கண்விழித்தேன்
இரவின் கழுத்து துண்டிக்கப்படிருந்த ஒருகாலை.
அவசர மனிதர்களின் உலகில்
எதுவும் அறியாதவர்களாய்
அவரவர் அலுவல்களில்...
மூழ்கியிருந்தார்கள் அலுவலகத்தில்.
எனது இருக்கையில் வேறொருவன்
பதவி உயர்வு கிடைத்த தொணிமாறாமல்...
- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.