தமிழால் முடியும்!

அவனியைப் புரட்டியோர் அற்புதங் கூட்டிட
தமிழால் முடியும்! - வளர்
புவனஞ் செதுக்கிப்பல புரட்சிகள் காட்டிட
தமிழால் முடியும்! - இவன்
சோம்பல் மனிதர்க்குச் செழுமையை மீட்டிட
தமிழால் முடியும்! - பல
போர்க்குண புல்லர்க்கு பொறுமையைத் தீட்டிட
தமிழால் முடியும்!
பிழைமுறை தள்ளிப் புதுமுறை புகுத்திட
தமிழால் முடியும்! - உயர்
மழையெனப் மண்ணுயிர்க்கு மாண்போடுதவிட
தமிழால் முடியும்! - சொல்
உயர்கல்வி உன்னத ஊறுணி பொங்கிடத்
தமிழால் முடியும்! - கேள்
அயல் நாட்டு அறிஞர்க்கும் ஆச்சரிய மூட்டிட
தமிழால் முடியும்!
அறிவியல் ஆக்கமதைச் செறிவுடன் நோக்கிடத்
தமிழால் முடியும்! - அரிய
பொறியியல் துறையிலும் புதுமைகள் புரிந்திட
தமிழால் முடியும்! - புதிய
கணிப்பொறி மொழிக்கொரு நிகண்டுகள் படைத்திட
தமிழால் முடியும்! - உயர்
வணிகத்து வாகைதனை எளிதாக்கி ஏற்றம்தர
தமிழால் முடியும்!
மென்முறை வாழ்வினை மேதினிக் குரைத்திட
தமிழால் முடியும்! - துயர்
வன்முறை குரோத வக்கிரம் ஒடுக்கிட
தமிழால் முடியும்! - மலர்
முகத்தொடு மனிதரினம் மகிழ்ச்சியில் முத்தாட
தமிழால் முடியும்! - பலர்
அகம்உறை அச்சப் பேயினை அழித்திடத்
தமிழால் முடியும்!
இல்லறக் கூட்டினில் இனிமை கூட்டிட
தமிழால் முடியும்! - நிறை
நல்லறக் கோட்பாட்டை நாட்டோர் நவிழ்ந்திட
தமிழால் முடியும்! - தளிர்
நெஞ்சினில் நம்பிக்கை நாற்றினை விதைத்திட
தமிழால் முடியும்! - அவர்
அஞ்சிடும் போதினில் அரண்களை ஆக்கிட
தமிழால் முடியும்!
ஈரடிக்குறளில் இயம்பிய கருத்தில் இமயந்தொட
தமிழால் முடியும்! - மனத்
தேரடிப் பாதையில் தெய்வீகச் சுடரேற்றத்
தமிழால் முடியும்! - உளக்
கட்டுப்பாட்டை கண்ணியத்தில் கலந்தூட்டிட
தமிழால் முடியும்! - அகங்
கெட்டுத் திரிவோர் வாழ்விலொளி ஏற்றிடத்
தமிழால் முடியும்!
- முகில் தினகரன், கோவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.