வாழ்க்கையின் விளக்கம்...?
ஆதவன் மறையும்
அந்திநேரத்து
ஆகாயவீதியில்
விண்மீன்கள் விழித்தெழ
அழகு நிலா பவனி...
ஒருவன் கண்ணயர்வில்
இன்னொருவன் விடியல்
ஒருவன் வீழ்ச்சியில்
இன்னொருவன் எழுச்சி
ஒருவன் துக்கத்தில்
இன்னொருவன் மகிழ்ச்சி
ஒருவன் முடிவுரையில்
இன்னொருவன் முகவுரை...!
வெந்த நெஞ்சின் பாரம் நீக்கி
வேதனைகள் தூக்கி எறிந்து
மந்த நிலை மனதில் அகற்றி
மகிழ்ச்சி நிலை அகத்தில் தோன்ற
மாந்தர் தாம் விழையும் நேரம்...!
உறுதியில்லா உறவும்
உரிமையில்லாப் பாசமும்
நிம்மதியில்லாத் தனிமையும்
நினைவில்லாப் பழமையும்
நிலையில்லா வாழ்க்கையை
நித்தமும் நினைவூட்டும்..!
ஊமை கண்ட கனவுக்கு
குருடன் சொல்லும் விளக்கமாய்
நம் வாழ்க்கை..!
- பாளை. சுசி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.