சுமைதாங்கிகள்
சுவடில்லாமல் போய்விட்டன
சுமைதாங்கிகள்...!
சுதந்திரத்தின்
சுவீகாரப் பிள்ளை
ஜனநாயகத்தில்
சாலையோரங்களிலெல்லாம்
சுமைதாங்கிகளாய்-
சாதாரண மக்கள்...
எலிகள் சுரண்டிய
எல்லா பாரமும்
இவர்கள் தலையில்...
இலவசப் பச்சிலைக்கு
ஏமாந்து
எமனிடம் செல்லும் வெள்ளாடுகளாய்...
வெளிச்சத்தால்
ஏமாறும் விட்டில்களாய்...
இவர்கள் உள்ளவரை
வரிவிழும் வயிற்றில்
வரிச் சுமையாலே..
வன்முறை வளரும்
விலை உயர்வாலே...
இருட்டு
நிரந்தரமாகும்...
வெளிச்சம் என்பது
வேடிக்கைப் பொருளாகும்...
எதையும் தாங்கும்
இதயம் என்றுசொல்லி
எதையும் தாங்கும்
முதுகாக்கி விட்டார்கள்...
பாவம் இவர்கள்-
எதையும் தாங்கும்
சுமைதாங்கிகள்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.