துப்பாக்கி!

மொழியின் மென்மைக்குள் புதைந்து,
வருணனை வார்த்தைகளுக்கு வாசைன பூசி,
கன்னல் சுவைக் கவி படைக்கும்
கன்னித் தமிழ்க் கவிஞர்காள்….
உம்
எழுதுகோலின் ரசனை விரல்கள்
வீணையை மீட்டியது போதும்
இனி
பறையடிக்கப் பழக்கி விடுங்கள்!
வானையும் நிலவையும்
வஞ்சியர்தம் எழிலையும்
பாடிப் பாடிப்
புழுத்துப் போன
பச்சை நாக்கைத் துப்பி விட்டு,
பரிச்சயமான யதார்த்தத்தின்
பாவ நிகழ்வுகளைப் பாட
பாரதியின் தைரிய நாக்கை
பண்டமாற்று செய்து வாருங்கள்!
இனி
அறிவுரை பகரும்
அரிதாரக் கவிதைகள்
மௌனத்தின் நுகத்தடியில்
மரணித்துத் தொங்கட்டும்!
சீழ் வடியும் சமூகத்தின்
ஈர நிர்வாணம் மறைக்க
மின்சாரப் பொறியாய்
மீட்சிக் கவிதைகள்
கோடாரி உயர்த்தட்டும்!
காதலைப் பாடிப் பாடி
காலத்தின் பரண் மேல்
கனவுகளை நட்டது போதும்!
கண்ணெதிரில் உலவும்
கர்வ பிம்பங்களைக்
கவிழ்த்துப் போடும்
கவிப் பேரிகை
கந்தகமாய்த் தெறிக்கட்டும்!
மன்னர்களைப் பாடிப் பாடி
மடிப் பிச்சை ஏந்த
இலக்கியக் காலமல்ல இது!
சருகுகள் உயரும் சயனைடு காலம்!
பிளாஸ்டிக் ரசனைகள் பேரம் பேசும்
பாலிதீன் பிரதேசம்!
ஆம்!...இனி
தென்றல் கவிதைகள்
தெறித்துப் போகட்டும்!
சூறாவளிக் கவிதைகள் மட்டும்
சூழ் கொள்ளட்டும்!
தோட்டங்கள்
தொலைந்து போகட்டும்!
தோட்டாக்கள்
தோரணம் கட்டட்டும்!
தூரிகைகள்
துருப்பிடிக்கட்டும்!
துப்பாக்கிகள்
தோளேறட்டும்!
- முகில் தினகரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.