காலம் சொல்லும் பதில்...!
ஆளைப் பார்த்து
அழகில் மயங்கி
அலைந்ததில்லை பின்னால்...
அவளைக் கவர்ந்திழுக்க
அரைவேக்காடு திட்டங்களை
அவசரமாய் அரங்கேற்றி
அசிங்கப்படவுமில்லை...
கடிதம்கொடுத்துப் பிடிக்க,
படிக்கும் பசங்களைத்
தபால்காரராய்த் தயார்செய்து
தாயாரிடம் பட்டுவாடா பண்ணி
தலைகுனிந்த அனுபவமுமில்லை...
செல்போன் எண்ணை
அவள்
சொல்லாமலே தெரிந்து,
கேட்காமலே காசுபோட்டு
மிஸ்டுகாலுக்காக
மெனக்கெட்டதுமில்லை...
கனபாடுபட்டுக் கண்விழித்துக்
கவிதை எழுதிக் காட்டி,
வாங்கிக்
கட்டிக்கொண்டதுமில்லை...
ஆளைப் பார்த்ததில்லை,
குரலைக் கேட்டதுமில்லை...
ஆனாலும்,
முகநூலில் பார்த்து
முகம்தெரியா திறமை கண்டு
திறந்திடுமா இதயம்...
கேட்கிறான் அவன்...!
பதில் இதுதான்-
ஒருதலைராகமிது
காதல் காற்றில் கலந்து
இதயராகமாய் இணையுமா-
காலம் சொல்லும் பதில்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.