கோபுரப் புறாக்கள்
கோவில் மணி ஓசைக்குள்
பதிந்திருக்கும் உன் வருகையை
கோபுரப் புறாக்கள் பதிவு செய்கிறது
வீட்டில் இருக்கும் இந்த
தெய்வத்திற்காக மனக்கோவில்
கட்டிக் கொண்டிருக்கும் பக்தன் நான்
நீ சூடிவிட்டு விழும்
மல்லிகை துள்ளிமடிகிறது
அது மலர்ந்த பிறவிப்பலனை
அடைந்துவிட்டதாய்!!!
உன் பூசை சாமான்களுக்கு
பிரச்ச்சனையமே நீ தொட்டுத்தராமல்
கடவுளுக்கு காணிக்கையாகாதாம்?
நீ நின்றுவிட்டுப்போகும்
கோவில் பிரகாரம் உற்சவமூர்த்தியிடம்
சொன்னதாம் பெண்கடவுள்
சந்நிதிக்கு செல்கிறது என்று!!!
கோவிலில் எத்திசையில் திரும்பினாலும்
கற்சிற்பங்கள்
நீ இருக்கும் திசையில்
மட்டுமே நிஜச்சிற்பம்...
கோவில் குங்குமத்திருக்கும் சிறப்பு
உன் நெற்றியில் இடம் பெற்றதுதான்...
நீ விரதமிருந்துவிட்டு உண்ணும்
முதல் பருக்கை சொல்லிக் கொண்டதாம்...
அடுத்து பருக்கையிடம்...
நான் தான் பிரசாதம் என்று!
எனக்கும் உனக்கும் மட்டும்
தெரிந்த நம் காதல் மொழியை
அண்டவெளியிலும் பதிவிடுகிறோம்
நம் செல்பேசி ஒளிக்கற்றைகள் மூலம்...
நம் நேர்கோட்டுக் காதலின்
முடிவில் படைப்போம்
நமக்கே நமக்காய்
ஒரு தலைகீழ் முக்கோணம்!!!
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.