சூர்ப்பனகையுடன் ஒரு சுற்றுப்பயணம்!

எப்போதும்
தேவதைகள்
நித்தியக் கனவுகளில்
நித்திரையை நிறைப்பார்கள்.
நேற்றென்னவோ
ஓர் அரக்கி வந்து
உறக்கம் கலைத்தாள்.
அவள்
சூர்ப்பனகை.
கம்பன் எனும் கொல்லன்
வடித்த நகைகளுள்
சூர்ப்பனகை தான்
சூப்பர் நகை.
எங்கு வந்தாய்
என்ன வேண்டும் என்றேன்.
உறவுகளைக் காண ஆசை
ஊர்சுற்றிப் பார்க்க வேண்டும்
உடன் வர வேண்டும்
ஒரு மணிநேரம் என்றாள்.
சம்மதித்தேன்.
பயணம் தொடங்கியது.
சீதைகள்
அழகு நிலையங்களில்
அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
பாடாய்ப் படுத்திய
இலக்குவனர்கள்
பாகப்பிரிவினை கேட்டு
நீதி மன்றங்களில்
நின்று கொண்டிருந்தார்கள்.
நெஞ்சைக் கிழித்துப் பார்த்த போது
அழகு ராமன்
அங்கில்லையே என்ற
அதிர்ச்சியில்
மாரடைப்பில்
அவசரப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்தான்
அனுமன்.
தொலைக்காட்சி
முன் அமர்ந்து
விழிகளில் வழியும் நீரை
விரல்களால்
விலக்கிவிட்டுக் கொண்டிருந்தாள்
மனம்கவர்ந்த நாயகி
மண்டோதரி.
நான்காவது திருமணத்தின்போது
பிடிபட்டு
மோசடி வழக்கில் கைதாகி
சிறைக்குச் சென்றுகொண்டிருந்தான்
ராமன்
அதிர்ச்சிமேல்
அதிர்ச்சியான
சூர்ப்பனகை
புண்பட்ட மனதோடு
போய்வருகிறேன்
என்றாள்.
போகும்முன் என்னிடம்
அங்கங்கே என்
அண்ணனின் சாயலில்
பலரைப் பார்த்ததுதான்
ஒரே ஆறுதல்
என்றாள்.
- தங்கம் மூர்த்தி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.