எந்தக் காலம்...?
தன்னிகரில்லாத் தலைவர்களைத்
தனது இனமென்று
தலையில் தூக்கிவைத்து ஆடி,
சாதிச்சாயம் பூசி
சந்தியில் சிலையாய் நிறுத்தி
காக்கை குருவிக்குக்
கழிப்பிடமாய் ஆக்குவதும்...
கலவரத்தில் தாக்கும்
இலக்காகிவிடாமல் காப்பாற்ற
கம்பி வேலிகட்டிக் காப்பதுவும்...
சிலைக்கு விலையாகச்
சில உயிரை மாய்ப்பதுவும்...
இறந்துவிட்ட பெரியோரையும்
இனம் பார்த்து ஒதுக்குவதும்...
இப்படிப் பல
இனம் பார்க்கும்
இனமிது மனிதன் இருக்கும்வரை,
இயல்பான வாழ்வை
இனி மனிதன் பெறுங்காலம் எக்காலம்...?
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.