இனிதாய் மலரட்டும்...!
காலண்டர் தாள்கள்
காலியாகிப்போகின்றன...
கிழித்துக் கழிந்த நாட்களில்
கிடைத்த அனுபவங்கள்,
கொஞ்சமா நஞ்சமா-அப்பப்பா...
வசந்தங்களும் உண்டு...
வலிகளுக்குத்தான் குறைவில்லை-
ஊழலின்
ஊர்க்கோலம் ஒருபுறம்...
அதை
ஒழிக்க வருபவன்
உன்மத்தன் ஆக்கப்படும்
அவலங்கள்...
நீதிமன்ற வாசலில்
நித்திரையில்
அரசு எந்திரம்...
ஆட்சிக்காக எடுத்திடும்
அவதாரங்கள் பலவாய்
அரசியல் கட்சிகள்.
அநாகரீகக் காட்சிகள்...
இயற்கைச் சீற்றங்ககள்.
இடர்ப்படும் மக்களைக்காட்டி
பிடுங்கிடும் கூட்டங்கள்...
இருட்டிலே கிடந்தாலும்
இலவசத்திற்கும்
இனிப்புப் பேச்சுக்கும் ஏமாறும்
நாட்டு மக்கள்...
இதைத் தெரிந்துதான்
ஆற்றிலும் அரசியல் கலந்ததால்,
ஆற்றங்கரை நாகரீகங்கள்
ஆற்றங்கரை அநாகரீகமாய்...
இப்படித்தான் இருக்குது
இன்னும் பலவாய்...!
இந்த ஆண்டாண்டு கசப்புக்கள்
இனியும் வேண்டாமே...
இவற்றையெல்லாம் விடுத்து
இனிதாய் மலரட்டும்
இனிவரும் புத்தாண்டு...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.