மாட்டுப்பொங்கல் - இனி...?
மாட்டைக் குளிப்பாட்டி
மணிக்கழுத்தில் சங்கு கட்டி
நெற்றிநிறை பொட்டிட்டு
நேர்த்தியாய் மாலைசூட்டி
கொம்புக்கு வர்ணம்பூசி
குப்பிப்பூண் மாட்டி,
குத்தவரும் மாட்டையும்
கொலுவாய் அலங்கரித்து,
முற்றத்தில் பொங்கல் பொங்கி
சுற்றமெல்லாம் சூழநின்று
சிறுவரெல்லாம் கொட்டடித்து
நறுமணப் புகையுடனே
பூசை செய்யும்
நாளெல்லாம் போய்விடுமோ...!
பத்துவருடம் கழித்து
பசுமாட்டைக் காண்பதற்கு
போகணுமோ
பட்டணத்து காட்சிசாலைக்கு...!
அடடா,
மாட்டுப்பொங்கல் பொங்கிடவே
மாடு ஒன்றையும் காணலியே..
ஓடு... ஓடு...
கம்ப்யூட்டரில் பொட்டுவைத்துக்
காரியத்தை முடி...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.