குட்டிச் சுவர்

காரை உதடுகளை உதிர்த்து
செங்கல் பல்லால் சிரிக்கும் நான்
கழுதைக்கு உறவினன்!...ஆம்
குட்டிச்சுவர் என் பெயர் குட்டிச் சுவர்!
பல நேரங்களில் பிறாண்டப் பட்டாலும்
சில நேரங்களில் சிறப்பிக்கப்படுகிறேன்!
திரிஷாவும் சினேகாவும்
வண்ணப் பதாகையாய்
என் மீது மிளிர்கையில்
நின்று ரசித்தவர் பட்டியல்
விண்ணைத் தொடும்!
நிராகரித்தவர் பட்டியலில்
வெற்றிடம் வெட்கப்படும்!
என் முதுகில் மறைந்து
கஞ்சா கசக்கும்
இருட்டு இளைஞர்களை
காவு கொடுக்கும் கனவுண்டு
அதற்கு கரங்களில்லையே என்ற
கவலையுமுண்டு!
ஒரு வாரம் நகைக்கடை விளம்பரத்தில்
செல்வந்தனாயிருப்பேன்!
மறு வாரமே
மூல வியாதிக்கு
மூலிகை மருத்துவம் சொல்வேன்!
ஆம்!
விளம்பரத்துறையின் விசுவாமித்திரர் நான்!
இரவு நேரங்களில் மட்டும்
இதயத்தை இரும்பால்
வார்த்துக் கொள்வேன்!
மறைவில் நடக்கும்
சதை வியாபாரத்திற்கு
திரையாக நான்!
பண்பாடு சிதைக்கும்
பாவ நிகழ்வுக்கு
படுதாவாக நான்!
அன்றொரு நாள் ஆர்ப்பாட்டமாய்
அபரிமிதம் வழிந்தது!
அரசியல் கட்சி மாநாட்டிற்கு
அழைப்பிதழானேன்!
இதுவரை காணாத
எத்தனையோ வர்ணங்கள்
எதுகை மோனையுடன்
எழுச்சி வர்ணனைகள்!
மேலாக
மந்திரியின் மகத்துவம்
இந்த மண் சுவருக்கும் வந்தது!
ஆம்..
இரவு பகல் என்னேரமும்
இரண்டு காவலர்களின் கண்காணிப்பு
எதிர்க் கட்சிக்காரன் எவனும்
அழித்து விடாதிருக்க!
- முகில் தினகரன், கோவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.