விரைவில் தீவிரவாதியாய்...?
எனக்குள் அந்த அச்சம்
எரிமலைக் குழம்பாய்
தகித்துக் கொண்டிருக்கின்றது!
வள்ளலாரும் மகாத்மாவும்
வந்துதித்த மண் மீதுதான் நானும்!
ஆனாலும்...
அன்பே சிவமென்று சொல்ல
அடி நாக்கு மறுக்கின்றது!
பாவங்களுக்கு பயந்திருந்த பாலக மனம்
இன்று வீச்சரிவாளுக்கு மாலையிட
வேகமாய் முந்துகின்றது!
ஏன் இப்படியானேன்?
என்னையே உரசிப்பார்த்தேன்!
நடைமுறை நிகழ்வுகள்
நன் மனத்தைக் கெடுத்த கதை
நேரங்கழித்துத்தான்
நெற்றியில் உறைத்தது!
அநியாய தேவதைக்கு
ஆராதனை செய்யும்
அரசியல் கரங்களுக்கு...
இந்தச் சாக்கடைச் சமூகம்
சாமரம் வீசுவதால்....
சுயம் மறந்து
சுடுகாட்டு ஆந்தைகளை
தேசியப் பறவையாக்கி
தேரோட்டம் நடத்துவதால்...
பொது நலத்தைப்
பைத்தியக்காரத்தனமென
பட்டாபிஷேகம் சூட்டிப்
பாடையேற்றியதால்...
சுயநலப் பருந்துகள்
சுரண்டல் விருந்துக்கென
வஞ்சக சிறகுடன்
வானெங்கும் திரிவதால்...
கொலை செய்வது
குற்றமென்பது மாறி
தகுதியெனத்
தலை தூக்குவதால்...
திருட்டு என்பது
தீமையென்பது மாறி
திற்மையென
மார் தட்டுவதால்...
துரோகம் என்பது
துர்க்குணமென்பது மாறி
ராஜதந்திரமென
ரதமேறியதால்...
கலாச்சாரத்தைக்
கடை விரித்துக்
காசு நுகரும் கூட்டங்கள்
இலக்கியப் பசுவின்
வைக்கோல் கன்றுகளானதால்...
ஆன்மீக கோடாங்கிகளின்
ஆபாச உடுக்கையொலி
வேத நாடகத்தின்
வெறி பிடித்த தீக்குச்சியானதால்...
என் பொறுமை
கொஞ்சங் கொஞ்சமாய்
வறுமை அடைந்ததால்...
தவிர்க்க முடியாது...!
விரைவில் நானுமொரு
தீவிரவாதி ஆனாலும் ஆகலாம்!
அய்யகோ...!
கள்ளிச் செடிகளுக்கு
நந்தவனமே சொந்தமானால்
மலர்க்கூட்டம் என்ன செய்யும்?
பட்டாம்பூச்சிகள் எங்கு போய்...
பாராளு மன்றம் அமைக்கும்?
சமூகமா இது...?
இல்லை இல்லை...
மலட்டுத் தவளைகள் கும்மியடிக்கும்
மலம் நிரம்பிய பன்னீர்க் குடம்...!
- முகில் தினகரன், கோவை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.