தொடரும் ஏமாற்றம்...!

மின் விசிறி நின்று போய்,
ஐன்னலை திறந்தேன்
தென்றலை எதிர் பார்த்து...
சூடாய் புகை மூட்டம்
என் மூக்கை துளைத்தது...
கானத்தில் நடக்கையில்
காலில் முள் குத்தித் தடுமாறிய போது
தாங்கிப் பிடிக்க தோள் கொடுத்தான்
ஒரு வழிப் போக்கன்...
ஆனால் அவனே கள்வனாகி கவர்ந்து
போனான் என் உடைமைகளை...
தாகத்தில் தவித்து, நீருக்காக
ஓடிய போது,
தூரத்தில் கண்டேன் ஒரு கிணறு...
ஓடிப் போய் பார்த்த போது
அங்கே இருந்த பலகையில்
“இந்நீர் குடிப்பதற்கு உகந்ததன்று”
பட்டினியில் வாடிப்
போயிருந்த நான்
வகை வகையாய்
வயிறு நிரம்ப சாப்பிட...
ஆசைப்பட்டேன்....!
பட்டினியோடு
வேலைக்காக அலைந்தேன்...!
வேலை கிடைத்தது...!!
அப்போதுதான் டாக்டர் சொன்னார்
“வகை வகையாய் சாப்பிடக் கூடாது
உனக்கு வயி்ற்றி்ல் புண்-
“பட்டினி கிடந்தததால் கிடைத்த பரிசு!”
கவலையை மறப்பதற்கு
ஆளில்லா இடங்களி்ல்-
காடு, மலை, கடற்கரை என
கால் போன போக்கில் நடந்தேன்…
அப்போது என்னைப் பிடித்த
காவலர்கள் கேட்டனர்...
“நீ தீவிர வாதியா என்று”
மழையில்லாது காய்ந்து கிடந்த
எங்கள் ஊரி்ல்
திடீரென்று வானம் பொத்துக் கொண்டு
கொட்டியது ஒரு வாரமாய்…
ஓடிப் போய் கேட்டேன்
“உன் கவலை தீர்ந்ததா” என்று-
“இல்லை பயிர் மூழ்கி விட்டது,
டெங்கு காய்ச்சல் வந்து வி்ட்டது”
என்றான் ஊர்க்காரன்.
- தாரமங்கலம் வளவன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.