நமக்கில்லாத காதலர் தினம்!

நாம் காதலிக்கவுமில்லை,
காதலிக்கப் படவுமில்லை என்றெல்லாம்
பொய்கள் சொல்லி
போலியாய் பீய்த்த தெரியாதெனக்கு
பிரிவில் உருகி, துயரில் கருகி
நமக்கோர் ஜீவிதம்
தேவை இல்லாமல் தேவையாகி விட்டது
கண்டங்கள் கடந்த
காதலர்களானதை விட
கண்ட இன்பம் உண்டா கண்மணி?
அப்போது அருகிருந்து நீ
கண்களால் அனுப்பிய
கடிதங்களுக்கெல்லாம் உடனுக்குடன்
பதில் தர முடியாது போன
பாதகன் தான்
எனது தவறை ஏற்கிறேன் நான்
உன்னிடமிருந்து...
மாற்றுக் கருத்து வேண்டாம்
மன்னித்து விடு போதும்.
என் குடியிருப்பு
உயரங்களால் வளர்ந்ததல்ல
துயரங்களால் கலந்தது
ஊரிலிருந்து...
எனது சுவர்களை பூசிப் பூசியே
சாயம் போன சாதி நான்
என் வாசல்படியின் வாஸ்த்து சரியில்லை
அதனால்தான் காதல் சகி உன்னை
கைப்பற்ற வழியின்றி வலியோடு
விடை பெற்றேன்
இன்று....
மசகு கசியும் சகாரா
மணல் முகட்டு வெளிகளில்
ஒட்டகங்களை ஓட்டுகிறேன்
அன்றைய உன் உடன்பாட்டுக்குள்
ஒத்து வராமல் போனதெல்லாம் பற்றி
இன்றைய சமன்பாட்டு வாழ்க்கைக்குள்
சமர்ப்பித்து மனுச்செய்து - எதுவும்
சாத்தியமாகப் போவதுமில்லை
என்னை வெறித்துக் கொண்டு கடக்கிற
உன் பார்வைகளோடு
ரசித்துக் கொண்டு நடக்க
என் இதயத்தின் கால்களால் இயலவில்லை
இன்னமும்தான் !
- ரோஷான் ஏ. ஜிப்ரி, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.