உள்மனம்...!
கரிக் கோடுகளாலும்
கலர் பென்சில்களாலும்
வண்ணம் தோய்த்த தூரிகையாலும்
காகிதத்தில் உன்னைக்
காட்டிவிட முடியும்..!
புகைப்படம் எடுத்தோ,
வீடியோ பிடித்தோ
உன்னைப் பதுமையாய்
பதிப்பேற்ற முடியும்..!
ஆனால்,
உன் மனதின்
ஆசா பாசங்களை
பாதிப்பு, பரிதவிப்புகளை
ஆக்கங்களை, ஏக்கங்களை
பட்டியலிட முடியுமா?
பஞ்சாங்கம் திறந்து
ஜனன நேரம் குறித்து
ராசி, நட்சத்திரம் தெரிந்து
கட்டம் கட்டி
பகவான்களை வீட்டில் ஏற்றி
பார்வை பார்த்து
தோசம் தெரிந்து
ஜாதகம் கணித்து
பரிகாரமும் சொல்லி
பாவை உன் மனம்
படித்திட முடியுமா?
கைபிடித்து
பவுடர் தூவி
ரேகை பார்த்து - உன்
உள்மனம் சொல்ல
ஒப்புமோ?
கிளியோ, முயலோ
கோடாங்கியோ, பூசாரியோ
யார் உன் மனமறிவார்?
உன் மனம் - அது
உன் உலகம் - அதில்
நீ ராணி - அங்கு
உன் ஆட்சி..!
சுருண்டு கிடக்கும்
அந்த
சின்ன கூட்டுப்புழு - அது
உன் மனம் - அது
மௌனம்..!
- பாளை.சுசி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.