அழுவதா...? சிரிப்பதா...?
அழுவதா...? சிரிப்பதா...?
அழுதால் கோழை...
சிரித்தால் பைத்தியம்...
அனலும் இல்லை,
குளிரும் இல்லை...
அழுது கொண்டே சிரிப்பதா...?
சிரித்துக் கொண்டே அழுவதா...?
சிந்தனை செய்கிறேன்..!
எண்ணங்களில் தடுமாற்றம்...!
கற்பனையில் வறட்சி...!
கருத்துக்களில் சிதறல்...!
தலைவன் இல்லாக் காவியம்
அலைகள் இல்லாக் கடல்
அழகில்லா ஓவியம்
ஆசிரியன் இல்லாப் பள்ளி
உப்பில்லாப் பண்டம்
உறவில்லா பந்தம்
நட்பில்லா நண்பன்
உறுதுணையில்லாக் குருடன்
ஊன்று கோல் இல்லா முடவன்
தேன் இல்லா அடை
நீர் இல்லாக் குளம்
நிலா இல்லா வானம்
துடுப்பு இல்லாப் படகு
அடுப்பு இல்லாச் சமையல்
புழு இல்லாத் தூண்டில்
வாள் இல்லா வீரன்
நீர் இல்லா மேகம்
நிழல் இல்லா மரம்
தோகையில்லா மயில்
குரல் இல்லாக் குயில்
கனி இல்லாத் தரு
கரு இல்லாக் கதை
மணம் இல்லா மலர்
பணம் இல்லா நோயாளி
அன்பு இல்லா மனைவி
பண்பு இல்லாக் கணவன்
தெய்வம் இல்லாக் கோவில்
பக்தியில்லாப் பூசாரி
படையில்லா மன்னன்
பகுத்தறிவில்லா மக்கள்
அவையில்லா அரசன்
சுவையில்லா விருந்து
பாத்திரம் இல்லா ஏழை
பத்திரம் இல்லா மனை
பயிரில்லா நிலம்
தறியில்லா நெசவாளி
தாய் இல்லாக் கன்று
சேய் இல்லாத் தாய்
உளி இல்லாத் தச்சன்
களி இல்லா குயவன்
கரை இல்லா நதி
கூரை இல்லாக் குடிசை..!!
சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்...
அழுது கொண்டேயிருக்கிறேன்...
சிந்தனை சிதறிக் கொண்டேயிருக்கிறது.
- பாளை.சுசி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.