போர்க்களமானது...!
அன்னை தந்த
அறிமுகத்துடன்
என்னை நானே
எழுதிக் கேட்கிறேன்
அடியெடுப்பென்பது
அமர்க்களமானது
அதன் பின் வந்தவை
போர்க்களமானது!
சிநேகப் புணர்வின்
சிலுமிச விதையில்
விரகத்தில் துடித்து
வித்தென வெடித்து
மடி பற்றி விழுந்து
மண் பற்றி எழுந்து
அற்புத சாகசம்
அடடா ஜீவிதம்
அடியெடுப்பென்பது
அமர்க்களமானது
அதன் பின் வந்தவை
போர்க்களமனது!
படிப்பதில் முடிவு
பார்க்கவுமில்லை
பசியின்றி விடியா
நாட்களுமில்லை
நடுநிசியில் கிடந்து
நிம்மதி கடந்து
உயரத்தில் நடந்து
துயரத்தில் விழுந்து
அடியெடுப்பென்பது
அமர்க்களமானது
அதன் பின் வந்தவை
போர்க்களமானது!
ஜீரணிக்க இயலா
ஜீவித வேட்கை
புலரும் பொழுதாய்
புகையும் அனலாய்
உறையும் பனியாய்
உருகும் வெயிலாய்
நிறையும் கனவாய்
நெருக்கும் தவிப்பாய்
அடியெடுப்பென்பது
அமர்க்களமானது
அதன் பின் வந்தவை
போர்க்களமானது!
ஏணிப் படியாய் வாழ்வு!
ஏன் இப்படியாய் வாழ்வு?
அன்னை தந்த
அறிமுகத்துடன்
என்னை நானே
எழுதிக் கேட்கிறேன்.
- ரோஷான் ஏ.ஜிப்ரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.