எப்போது(ம்) இன்பம்?

இனிக்கின்ற வாழ்க்கையிலே
இன்பம் துன்பம் வந்து போகும்
எது இங்கே மிச்சமிருக்கும்?....
எல்லாம் என தெண்ணும்
எத்தர்களின் வாழ்வு மிங்கு
இல்லாது போகும் போகும்….!
இது உனது அது உனது
இது எனது என்று சொல்லும்……
இச்சகத் துள்ளோர்களும்
என்றேனும் ஒரு நாளில்
எங்கோ போய்விடுவர்...
எல்லாமும் விலகிப் போகும்…….!
இருப்பதும் போவதும்
இருந்தும் இறப்பதும்
எல்லா மிங்கு இறைவன் செயலே!
அதற்குள் ஏன் உனக்கு
அழுகிய எண்ணங்கள்!
அதை நீயும் கூறிவிடுவாய்…..!
புவியில் பிறப்பதும்
புவியில் வாழ்வதும்
புனிதமான செயலுக்கேயாம்!
புரியாது உளறுவாய்
புரியாது புகலுவாய்
புன்மையது என்றுணருவாய்!
இருக்கும் போதிங்கே….
எத்தனை நாடகம்….?
எத்தனை வேடங்கள்…?
அத்தனையும் அவன் கணக்கன்றோ?
இதில் நானென்ன? நீயென்ன?
அவனென்ன? அதுவென்ன?
எல்லாம் இங்கொன்று தான்…!
மரணித்தல் என்பது
மறத்தல் என்பதே!
மரித்தவை மரத்துப் போகும்!
எதுவுமில்லை என்றிங்கு
ஏங்கியே இருப்போர்க்கு
எல்லாமும் கொடுத்துதவுவாய்!
நலிந்தவர்க்கு நல்கிட
நம்மையே படைத்திறைவன்
நடமாட விட்டுவிட்டான்!
இதை எப்போதும் உணர்ந்திங்கு
எதுவும் நீ… உளறாமல்
இன்பமாய் வாழ்ந்திடுவாய்!
மூடத் தனங்களையும்
முட்டாள் பேச்சினையும்
மூட்டை கட்டி வைத்துவிடுவாய்!
முழுதாக இறைவனுக்கு
முழுதாக அர்ப்பணித்து
முழுமையாய் நன்மை செய்வாய்!
அப்போது மரணமில்லை!
அப்போது துன்பமில்லை!
இப்போதும் முப்போதும்
எப்போதும் ஏங்காமல்
எளிமையாய்
வாழ்ந்து விடுவாய்!
இதுதான் சத்தியம்!
இதுதான் நித்தியம்!
இதுதானே உண்மை வாழ்க்கை
!
இதனையே உணர்ந்து
நீ இன்பமுடன் வாழ்ந்திடு
எப்போதும் இன்பம் உனக்கே!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.