உலர்ந்த பழங்கள்

உன் நினைவுகள்
எப்போதும்
எனக்கு மகிழ்ச்சியைத் தருவதால்
அவை எனக்கு
உலர்ந்த பழங்கள் ...
ஆம்...!
வாழ்க்கையை உலராது அவை
என்னைப் பதப்படுத்துகின்றன
ஒரு பாதரட்சை
பாராண்டதைப் போன்று
உன் நினைவுகள்
என்றும்
எனை ஆளுகின்றன...!
சபரி இராமனுக்குக் கொடுத்த
பழங்களைப் போன்று
உனது ஞாபகங்கள்
எனக்கு உரமூட்டும்
உலர்ந்த பழங்கள்...!
நீர்ச்சத்துள்ளவை
என்றும் நீர்த்துப் போகும்
என்பர்; ஆனால்...
உன் நினைவுகள்
ஊற்றைப் போலல்லவா
என்னுள் சுரந்து
என்னை உற்சாகப்படுத்துகின்றன...!
நியூட்டன் ஈர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தது போல்
எனை ஈர்க்கும் விசையாக
உனது நினைவுகள்...!
அவை எனது
வாழ்க்கையின் பொக்கிசங்கள்...!
பாலைவனத்தில்
நீரின்றி அலையும்
பயணிக்குப் பருக
ஒரு துளி நீர் கிடைத்தால்
அவன் எவ்வாறு
புத்துணர்ச்சி கொள்வானோ
அதுபோன்று
உன் நினைவுகள்
உலர்ந்த பழங்களாக
என்னுள் உறைந்து கிடந்து
எனக்கு
உற்சாகமூட்டுகின்றன...!
சில பழங்கள்
பசித்த உடன் உண்ண வேண்டும்...!
சிலவற்றைப் பழுக்க வைத்து
உண்ண வேண்டும்...!
ஆனால் சிலவற்றையோ
உலர்த்தியும் உண்ணலாம்...!
உன் நினைவுகள்
உலர்த்தப்பட்ட பழங்களாய்...
என்னுள் என்றும் இருந்து
இனிமையைத் தந்து கொண்டே இருக்கின்றன...!
சிலர் பணத்தைப் பாதுகாப்பர்
சிலர் புகழைப் பாதுகாப்பர்
சிலர் பொன்னையும் வெள்ளியையும் பாதுகாப்பர்
ஆனால்...
நான் பாதுகாப்பதென்னவோ
உன் நினைவுகள் என்னும்...
உலர்ந்த பழங்களைத்தான்...!
உலர்ந்த பழங்களை
ஒவ்வொன்றாய் வாயிலிட்டுச்
சுவைக்கச் சுவைக்கச்
சொர்க்கமே தெரிவதைப் போல்
நெஞ்சில் நிழலாடும்
உன் நினைவுகள்
என்னுள் ஒரு
சொர்க்கபுரியையே அல்லவா
அமைத்துத் தந்துவிடுகின்றன...!
தாயின் தாலாட்டைக் கேட்டு
குழந்தை கண்ணுறங்கும்
உன்நினைவுகள் என்ற
உலர்ந்த பழங்கள்
என்னைத் தாலாட்ட
நான் ஆழ்மன எண்ணத்திற்குள்ளேயே
என்னைத் தேடத் தொடங்கி விடுகிறேன்...!
நான் என்னைத் தேடித் தேடிக்
காண முயல்கிறபோது
அங்கே...
நீயல்லவா
உலர்ந்த பழங்களைப் போல்
(உ) வந்து நிற்கிறாய்...!
உலர்ந்த பழங்கள்
சுவை குன்றாது என்பர்
உனது நினைவுகளும் அப்படியே...!
நினைக்க நினைக்க
அவை என்னையே
ஆட்கொண்டு விடுகின்றன...!
மனிதர்களின் நினைவுகள்
உலர்ந்த பழங்களைப் போன்றவை...!
அவை இருக்கும் போதும் இனிக்கும்...!
இறக்கும்போதும் இனிக்கும்...!
மனிதர்களின் நினைவுகள்
என்றும்...
உலர்ந்த பழங்களாய்...!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.