மேகம்
வானம் திரை என்றால் மேகம் ஓர் வண்ண ஓவியம்
வானம் வீதி என்றால் மேகம் ஊர்வலம்வரும் ஒரு தேர்
வானில் தவழ்ந்து ஓடும்போது மேகம் ஒரு குழந்தை
வாடும் பயிர்க்கு மழை தரும் மேகம் ஒரு தாய்
கன்னியரைக் கண்டால் ஆடும் காளையர் மனம்
கருத்த மேகத்தைக் கண்டால் ஆடும் வண்ணமயில்
கஞ்சித்தண்ணீரைக் குடித்துவிட்டு பால்தரும் பசுபோல்
கடல் உப்புநீரைக் குடித்து விட்டு மழை தரும் மேகம்
கவிதையில் சிறந்த கருத்து ஓட்டமிருக்கும் என்றால்
வானில் மேகத்தால் பயன் தரும் மழை ஓட்டமிருக்கும்
வானில் கார்மேக ஓட்டம் இல்லை என்றால்
நம் பூமியில் பயிரிட ஏரோட்டம் இல்லை தோழா!
கடலோரத்தில் நின்று பார்த்தால் வானில் உள்ள
மேகம் கடலை முத்தமிடுவதைப் பார்க்கலாம் தோழா!
எட்டாது தூரத்தில் இருந்தாலும் அந்த மேகம்
கிட்டாத நண்பன் நம் பூமிக்கு என்றும் தோழா!
வள்ளல் கர்ணன் போல் வானில் உலாவிவந்து
மழை தரும் மேகத்தை வாழ்த்துவோம் தோழா!
- சா. துவாரகை வாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.