அழியாச் சுவடுகள்!

அழகான மலர்த் தோட்டம்
அதில் வண்ண வண்ண மலர்கள்…
அதில் தேன் குடிக்க வரும்
ஆயிரம் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள்
வெள்ளை கருப்பு சிவப்பு
பச்சை வெளிர்ப் பச்சை
மஞ்சள் நீலம் என
எல்லாம் கலந்த
எத்தனையோ வண்ணங்களில்
வண்ணத்துப் பூச்சிகள்…!
அழகாய்ப் பறந்து திரிந்தன…
அவற்றுள் ஒன்று…
என் மனங்கவர்ந்தது…
மனம் படபடவென அடித்தது…
சிவப்பும் வெள்ளை நிறமும்
சேர்ந்த அது அழகிய வண்ணத்துப் பூச்சி…!
மற்றவற்றைக் காட்டிலும்
அது ஒன்று மட்டும்தான்
என்னைக் கவர்ந்தது…
ஏனோ தெரியவில்லை!
அந்த வண்ணத்துப் பூச்சி…
என்னவோ தெரியவில்லை…!
என்னையே சுற்றிச் சுற்றி வந்தது…
நானும் அதைப் பிடிக்க முயற்சித்து
விட்டில் பூச்சிபோலத்
தாவித்தாவிச் சென்றேன்…!
அவ்வண்ணத்துப் பூச்சி
மலரில் தேனுண்ணும்போது
அதனைப் பூப்போன்று
அசையாமல் பிடித்தேன்…
அது எதுவும் செய்யாது
என் கையுடன் வந்துவிட்டது…
நான் அதன் அழகை
இரசித்துக் கொண்டிருந்தேன்…
முதன் முதலில் தாஜ்மகாலைப் பார்க்கும்
ஒரு கலைஞனைப் போல…
என்னிதயம் பட்டாம்பூச்சியின்
இறக்கைகளைப் போன்று
படபடவென அடித்துக் கொண்டது…
இயற்கையாய்த் திரிந்த
அந்த வண்ணத்துப் பூச்சியை
ஏன் நான் சிறைப்பிடிக்க வேண்டும்…
அதனை விட்டுவிட்டுப் பின்னர்
பிடித்துக் கொள்ளலாமே…!
என் உள் மனம் போராடியது…
சரி நமக்குத்தானென்றால்
அது கண்டிப்பாக வந்துவிடும்…
அடையாளம் தான் பார்த்து விட்டோமே….!
எங்கே போய்விடப் போகிறது…!
என ஒரு கணம் நினைத்து…
அதனைத் தனியாக இருந்த
சில வண்ணமலர்ச் செடிகளில்
கொண்டுபோய் விட்டுவிட்டேன்….!
என்னிடமிருந்து விடுபட்ட
மகிழ்ச்சியில் வண்ணத்துப் பூச்சி…
என்னையே சுற்றிச் சுற்றி வந்து…
சிறகடித்துப் பறந்தது…
என்னுள் இன்பம் பரவியது…
அடடா…!
என்னிடம் எத்தனை அன்பு
இந்த வண்ணத்துப் பூச்சிக்கு…
என்னைவிட்டுப் பிரிய
மனமில்லை போலும்…
என்னுள் மகிழ்ந்து
நான் சற்றுக் கண்மூடித் திறந்தபோது…
அதனைக் காணவில்லை…
கண் பெற்று இழந்த
மனிதனைப் போலவும்…
செல்வம் இழந்த
கனவான் போலவும்…
என் மனம்….!
தேடினேன்….தேடினேன்…
.
என்னுடைய வண்ணத்துப் பூச்சியைத் தவிர
மற்றவை… எல்லாம்
ஆங்காங்கு பறந்தன…!
மனம் கனத்தது…
மலைத்தது… … … மறுகியது… …
கையில் கிடைத்த வைரத்தைத்
தவறவிட்ட ஏழை போன்று என்நிலை…
கைகளில் பார்த்தேன்….!
விரல்களில் அந்த வண்ணத்துப் பூச்சியைப்
பிடித்திருந்த சுவடுகள்…
சுவடுகள்… அழியாதவை…
காலத்தை நினைவுறுத்துவை…
வண்ணத்துப் பூச்சி இல்லை என்றாலும்…
அது விட்டுச் சென்ற வண்ணச் சுவடுகள்….
என் இதயத்திற்கு ஒளி தந்தன…
சுவடுகள்… சுவையானதும்…
சுமையானதும்…
சுகமானதும் கூட…
ஆம்………!
என் வண்ணத்துப் பூச்சியின் சுவடுகள்…!
என்றும் எனது…
காலச்சுவடுகளில் பயணிக்கும்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.