தொடர்ந்து கொண்டே இருக்கும்...!
ஒவ்வொரு மனிதனும்
தனக்கான களம் அமைத்துப்
போராடிக் கொண்டே இருக்கிறான்
போராட்டக் களங்கள் வேறுபடலாம்
ஆனால் அனைவரின்
ஒட்டு மொத்த ஓங்கிய குரல்
வெற்றியே!
நீண்டப் போரட்டத்தின்
வெற்றிகளைப் பிடுங்கித் தின்னும்
ஒட்டுண்ணிகளும் சாறுண்ணிகளும்
ஊரெங்கும் ஊடுருவி விட்டார்கள்
இந்த கிருமிகளைக்
கொன்றுவிட்டு ருசிக்கும்
வெற்றியின் சுவை அலாதியானது!
போரட்டத்தின் வெற்றி
நமக்குள் வெற்றிக் களைப்பைப்
பதித்துவிட்டுப் போனாலும்
அடுத்தகளமும் போராட்டமும்
மனிதனாய் இருக்கும்வரை
நமக்குள்ளே
தொடர்ந்து கொண்டே இருக்கும்!
நாம் கொல்லமுடியாத
கிருமிகளும்
சாறுண்ணியாய் ஒட்டுண்ணியாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்!
- ராசை நேத்திரன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.