கண்ணீரின் கதை!

கவலை கொள்ளும் மனிதன்தான்
கண்ணீர் விடுவானா...?
மனிதன் மட்டும்தான் கண்ணீர் விடுகின்றானா?
எனக்குள்ளே கேள்வி எழுந்தது…!
இயற்கையும்தான் கண்ணீர் விடுகிறது…!
இரவுப் பெண் விடும் கண்ணீர்
இனிதான பனித்துளியாம்….!
மேகப் பெண் சிந்தும் கண்ணீர்
மென்மையான மழைத் துளியாம்!
இயற்கை அழுகின்றபோது
உலக உயிர்கள் உயிர்த்தெழுகின்றன…!
இவ்வழுகையும் அளவோடு
இருக்கும் வரைதான் இன்பம்…!
அளவு மீறும்போது
அனைத்தும் அழிவெய்துகின்றன…!
மனிதன் அழுகின்றபோது
இயற்கை சிரிக்கும்…!
அதிலும் கண்ணீர்…!
காரணத்தோடுதான் வரும்
எடுத்ததற்கெல்லாம்
கண்ணீர் விடுபவன் கோழை
பெண்களுக்குக் கண்ணீரே ஆயுதம்
ஏழைகள் அழும் கண்ணீர்
கொடுமைக்காரனின் செல்வத்தை
அரித்து விடுகிறது..!
இறப்பில்தான் கண்ணீர் வரும் என்பர்…
ஆம் காதலர்கள்
ஒருவரை ஒருவர் இழக்கின்ற போதும்
நண்பர்கள் யாரோ ஒருவரை
இழக்கின்ற போதும்
மனிதன் எந்த ஒன்றையாவது
இழக்கின்ற போதும்
இயல்பாய் அருவிபோல
கண்ணீர் பெருகுகிறது…!
கண்ணீர் கூட சிலவேளைகளில்
சுகமாகிப் போய்விடுகிறது…!
தன்காதலி ஜோசப்பினை இழந்த போது
கண்ணீர் விட்டான் நெப்போலியன்
அவனது கண்ணீர்
அவனது சோகத்தைப் பெருக்கியதே தவிர
அவனது சுகத்தை உள்ளிருந்து அழித்தது…!
தன் வாழ்க்கை தேவதை
பென்னி மார்க்ஸை இழந்த போது
எதற்கும் கலங்காத காரல்மார்க்ஸ்
கண்ணீர் விட்டார்…!
என் வசந்தம் பறிபோய்விட்டதே என்று…
கண்ணைப் பறிகொடுத்தவன்
பேதலிப்பதைப் போன்று
காதலியைப் பறிகொடுத்த
சார்லி சாப்ளின்
கண்ணீர் வடித்தார்…!
ஆம் கண்ணீருக்கும்
ஓர் அர்த்தமுண்டு…
அம்பிகாபதியும் அமராவதியும்
கண்ணீரில் கரைந்து
அமரத்துவம் ஆனார்களே...!
கண்ணீர் இதயங்களைக் கரைக்கின்றது
இரக்கமற்றவரின் இதயத்தில்
ஈரத்தை ஏற்படுத்துகிறது!
சிலர் துன்பத்தால் கண்ணீர் விடுவர்
சிலர் துன்பத்தைக் கண்டு கண்ணீர் விடுவர்
நல்லவர் துன்புற்று வடிக்கும்
கண்ணீர்த்துளி
நாட்டையே நாசமாக்கும்…
அப்போது கண்ணீரும்
ஆயுதம் தானே...!
இங்கு தனக்காகக் கண்ணீர் வடிப்போரே அதிகம்
பிறருக்காகக் கண்ணீர் வடிப்பவர் சிலரே...!
இவரே உன்னத மனிதர்…!
இவரையே உலகம் போற்றும்.
கண்ணீர் காரணத்தோடுதான் வரும்.
காரணமின்றி வரும் கண்ணீர்
சிரிப்பின்போது வரும்!
அது சிந்தனையைத் தூண்டாது...
உள்ளத்தின் வெளிப்பாட்டை
உணர்த்துகின்ற நிலைப்பாடே
உள்ளத்தை உருக்குகின்ற கண்ணீர்தான்!
ஆழமான அன்பை
அறியத் தருவதும் கண்ணீர்தான்!
இங்கு எதைப்பெறவும்
கண்ணீர் விட வேண்டும்
இறைவனுடம் வேண்டிப் பெறவும்
கண்ணீர் விடவேண்டும்
இதயத்தை இழக்கின்ற போதும்
கண்ணீர் விடவேண்டும்
கண்ணீரே அனைத்தையும்
காட்டிக் கொடுத்துவிடுமாம்
கண்ணீர் துன்பத்தைக்
கரைத்துவிடும்…!
காலத்தையும் கரைத்துவிடும்
கண்ணீர் எதையும் கரைத்துவிடும்
அதனைக் கரைக்க முடியாது…!
கண்ணகி வடித்த கண்ணீர்
மதுரையைக் கரைத்ததுவே
பாஞ்சாலி விட்ட கண்ணீர்
கெளரவரைக் கரைத்ததுவே
சீதை வடித்த கண்ணீரால்
கானகம் மட்டுமா கரைந்தது
இலங்கை மன்னனுமன்றோ
கரைந்து காணாமல் போனான்...!
காதலனைக் காணாமல்
காதலி அழும் கண்ணீர் …
அன்புக் கண்ணீர் அது
ஆற்றாது அழுத கண்ணீர்…!
காதலியைக் காணாது காதலன்
அழும் கண்ணீர் …
துன்பம் மிகுந்த துயரக் கண்ணீர்.!
பிரிந்த இதயங்கள்
துடித்திடும் வேளையில்…
துயரம் மிகுந்து வர
துளித்துளியாய் வரும் கண்ணீர்
ஆற்றாக் கண்ணீரே!
என்றும் ஆறாத கண்ணீராம்..!
அது இதயத்தின் செந்நீராம்.!
சித்தம் நிலைகுலைய
சிதிலமடையச் செய்கின்ற
இரத்தக் கண்ணீராம்…!
காலம் கூட அதன் வடுவை
மாற்ற முடியாது…!
காலமாகின்றபோதுதான் …!
அக்கண்ணீர் கண்ணடையும்…
இராமனைப் பிரிந்தபோது
சீதை விடுத்த கண்ணீர்
சிந்தையை உருக்கியதே!
இராமனின் சித்தத்தைக் கலக்கியதே…!
இருவரும் சேர்ந்தபோது
இன்பத்தில் கண்ணீர் வர
இருவரும் பேச்சின்றி
இன்பத்தில் லயித்தனரே.!
உலகில் ஒவ்வொன்றுக்கும்
ஒரு விலையுண்டு…!
கண்ணீருக்கும் விலையுண்டு…!
கண்ணீர் காயத்தின் மருந்து
நேயத்தின் விருந்து…!
சொற்களின் களஞ்சியம்…!
துளிக் கண்ணீர் அனைத்தையும்
உணர்த்திவிடும்!
அனைத்தையும் உணரச்செய்யும்!
அனைத்தையும் அணைத்துக் கொள்ளும்!
சிலர் வெளிப்பட அழுவர்!
சிலர் உள்ளத்திற்குள்ளேயே அழுவர்!
சிலர் அழுதாலும் தெரியாது!
தண்ணீருக்குள் மீன் அழுதால்
அதன் கண்ணீரை அறிய முடியாதது போல்!
ஒன்று புலப்படும்;
மற்றொன்று புலப்படாது!
முன்னது பிறரை உருக்கும்!
பின்னது அவரையே உருக்கும்…!
கண்ணீர் சுகமானது
அனைத்தையும் அது கரைத்துவிடுவதால்…!
கண்ணீர் கண்ணியமானது..!
அனைத்தையும் சொல்லாமல் சொல்லுவதால்!
கண்ணீர் அனுபவத்தின் ஆசிரியர்
அனைத்தையும் புரிய வைப்பதால்!
கண்ணீர் காலத்தின் சுவடு
உள்ளத்திற்குள்ளேயே
உறைந்து கிடப்பதால்…!
கண்ணீர் உணர்வுகளின்
ஊர்வலம்…!
உணர்வுகளை உலா வர விடுவதால்
கண்ணீர் இதயங்களின்
இலக்கிய மடல்…!
என்றும் இருந்து கொண்டே இருப்பதால்.!
கண்ணீர் கவிஞனின் கரு.!
காவியங்களாய் உருவாவதால்…!
காவியங்களை உருவாக்குவதால்…!
கண்ணீரே…நீ…!
கண்ணீரே …நான்…!
நாம்…உலகம்…!
ஆம்...! கண்ணீரே… எல்லாம்…!
- முனைவர் சி.சேதுராமன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.