பிறவிக் கடன் தீர்க்க வேண்டும்!
மூன்றெழுத்துக் கவிதை
சொல்லச் சொன்னால்
முதலில் நான் சொல்வேன்
அம்மா என்று…!
உலகில் ஏழு அற்புதங்கள்
இருப்பதாகச் சொல்கிறார்கள்
எனது ஒரே அற்புதம்
என்னைச் சுமந்த தாய்தான்…!
அம்மா உனக்கு வலி கொடுத்துப்
பிறந்த காரணத்தால்தானோ என்னவோ
நான் கீழே விழுந்து
அடிபட்டு எனக்கு அதனால்
வலி ஏற்படும்போதெல்லாம்
அழைக்கிறேன் அம்மா என்று!
எனக்கும் கருவறை
இருந்தால் உன்னையும்
சுமப்பேன் அம்மா…!
இரத்தத்தைப் பாலாக்கி
இரவுகளைத் தூங்காது
தொலைத்துவிட்டு
எனக்காக வாழ்ந்த தாயே...!
இன்னுமொரு பிறவி
இருக்குமென்றால்
அதில் நீ நானாகவும்
நான் நீயாகவும்
பிறக்க வேண்டும்…!
என் பிறவிக் கடனைத்
தீர்க்க வேண்டும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.