சுற்றிக் கொண்டிருக்கும் மனம்!

எனக்குள் நினைக்கும்போதே
என் நெஞ்சம் கனக்கின்றது
எதைக் கொண்டு
என் மனதை
ஆற்றிக் கொள்ள…?
எந்த வழியும் புலப்படவில்லை.
புலம்பலாகவே
வாழ்க்கை நகர்கின்றது…
தொலைத்துவிட்ட காலம்
கடந்து சென்ற இளமை
பிரிந்த நட்பு
விலகிச் சென்ற உறவு
விளங்கிக் கொள்ளாத மனசு…
என்று எத்தனையோ...?
இவற்றையெல்லாம்
நினைக்கும்போது
என் நெஞ்சம் கனக்கின்றது…!
நேசித்த பார்வை
பின் தொடர்ந்த பாசம்
புரிந்தும் புரியாத மனசு.
கடந்து போன வசந்தம்
இவையெல்லாம்
மனதில் உலாவரும்போது
என் நெஞ்சம் கனக்கின்றது...!
அன்று நின்ற இடத்திலேயே
நினைவுச் சுழலாய்ச் சுழல்கிறது…
எதைச் சொல்லியும்
எதிலும் மனதில் லயிக்கவில்லை.
மாறிய கிராமம்…
மாறிய முகங்கள்…
மாறிய மனிதர்கள்…
ஆனால் என் மனம் மட்டும்
ஏனோ மாறவில்லை…
செந்தட்டிச் செடி பட்டு
உடல் அரிக்குமே
அதுபோல
என் மனதை
உன் நினைவுகள்
எப்பொழுதும்
அரித்துக் கொண்டே இருக்கிறது…
உன்னைச் சந்தித்த நாள்களை
நினைத்து என் உள்ளம்
காற்றாடியாய்ச் சுழல்கிறது…
என்ன செய்வது...?
இன்று
எல்லாம் மாறிய நிலையில்…
என் மனம் மட்டும்
என்னவோ அதே நிலையில்…
முளையில் கட்டியிருக்கும்
ஆடு அதைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருப்பதைப் போல
உன்னைப் பற்றிய நினைவுச் சுழலில்
என் மனம் மட்டும்
சுற்றிக் கொண்டே இருக்கிறது…!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.