காலம் மாறும்...!

காலங்கள் மாறினாலும் உண்மை
அன்பே நிலைத்திருக்கும்…!
அதற்கென்ன செய்வது…?
அலைகடலென மனம்…
எப்போதும் அமைதியில்லாது
ஆர்ப்பரிக்கின்றதே…!
உன்னருகில் இருப்பேன்
என்று சொன்ன உறவுகள்
ஒன்றுமில்லாதபோது
ஒதுங்கிச் சென்றுவிட்டனவே…!
ஆறுதலாய் வந்த உறவும்
அழவைத்துப் பார்த்து
அகதி நிலைக்கு
நம்மை ஆளாக்கி விடுகிறதே!
ஆழமாகப் பதிந்து விட்ட நினைவுகள்
ஆட்கொல்லியாய் என்
ஆன்மாவை அலைக்கழிக்கின்றதே!
கால மாற்றத்துள் ஆன்மாவும்
அன்பின்றிக் கடுகாகிப் போனதுவே…!
அன்பாகப் பண்பாகப்
ஆசையாகப் பழகிய
நட்பும் உறவும்
காலதேவனின் ஆட்சியில்
திடுமென மாறி
திக்குமுக்காடச் செய்கின்றதே…!
காலம் இராமனையும்
கானகத்திற்கு விரட்டி
நல்ல மாற்றத்தைச் செய்ததுவே…!
நட்போடும் உறவோடும்
நன்குப் பழகித் திரிந்த
பாண்டவரையும் காலம்
பஞ்சாய்ப் பறக்கடித்துப்
பக்குவப்படுத்தியதே…!
பரிதவித்துப் போனஅவர்கள்
பின்னர்
பல வெற்றி பெற்று மீண்டு
பல நாள்கள் வாழ்ந்தனரே!
அவருள் காலம்
மாற்றத்தைச் செய்ததுவே…!
எதுவும் தற்காலிகம்தான்…
எந்நிலையும் தற்காலிகம்தான்...!
எவரும் தற்காலிகம்தான்...
எந்த உயிரும் தற்காலிகம்தான்...!
இது காலத்தின் கணக்கன்றோ.?
இன்று பொல்லாங்காய்
தெரிவதனைக் காலம்
பொன்னாக மாற்றி விடும்…!
புண்ணான நெஞ்சைக் காலம்
புனிதமானதாக ஆக்கிவிடும்..!
காலம் மாறாது...
வாழ்க்கையை மாற்றிவிடும்…!
காலமாற்றம் நெஞ்சில்
ஆறாத வடுவைத் தரும்
மாறாத விளைவைத் தரும் - அது
மனதில் என்றும் நிழலாகும்…!
நிழலாடி நிழலாடி மனதில் என்றும்
நினைவுகளாய் நிலைத்துவிடும்
நினைவுகள் தொடர்ந்து வரும்
காலம் மட்டும் மாறாது…!
நம் மனதைக் கனக்க வைத்துச்
சென்று விடும் - அதற்குக்
காலம் தான் நல்ல மருந்தாகும்…!
காலமே பதில் சொல்லும்.!
காலமே மாற்றம் தரும் என்றும்
அந்தக் காலம் மட்டும் மாறாது - அது
அனைவர் வாழ்விலும்
மாற்றத்தைச் செய்துவிடும்!
வாழ்வில் வசந்தம்
ஒரு நாள் தேடிவரும்…!
இழந்த காலம் ஒருநாள்
என்றாவது மீண்டு விடும்...!
எனும் நம்பிக்கையில்
நாம் பயணிப்போம்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.