அன்பே உன்னை எண்ணி...!
மலரென்று உன்னை எண்ணி
நான் மனதினில் வைத்திருந்தால்…
பிரிவென்று வரும்போது
நீ பெருந்தணலாய்ச் சுடுகின்றாய்!
நாம் கூடி இருக்கும் போது
குளிர் நிலவாய்த் தானிருந்தாய்
பிரிகின்ற போதெல்லாம் ஏன்
ஞாயிறாய்ச் சுடுகின்றாய்…?
திங்கள் முகத்தவளே!
தினமும் உன் நினைவு
என்னைத் தீயாய்ச் சுடுகிறதே…!
திங்கள் எப்போதும்
குளிரத்தான் வேண்டுமன்றோ…?
ஏன்தான் எப்போதும் என்னை
தணலாகத் தகிக்கின்றாய்…?
எனக்குக் கோடைகாலங்கள்
இன்னல் பல தரும்போது
வசந்தமாய் உன் நினைவு
என் மனதில் வந்து வந்து போகிறது…!
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கும்போது
என் மனதில் விளக்கொளியாய்
நீ வெளிச்சத்தைத் தருகின்றாய்…!
மலர்கள் இருக்கும் போது
மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில் அதுவும்
விறகாகிப் போயிருக்கும்…!
வேராக நீயிருந்து
என்னைத் தாங்கிப் பிடிக்கின்றாய்…!
நான் விறகாகிக் போகாமல் எனை மீண்டும்
தழைத்த மரமாக்கி விட்டுவிட்டாய்…!
உன் நினைவுகள் எப்போதும்
எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி என்றும்
என் சுவாசத்தை நிறைத்திருக்கும்… … …
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.