பிரிதல்
நாமிருவரும் பிரிதல் என்பது
எப்படிச் சாத்தியம் ஆகும்…?
உன்னில் நான் இன்னும் இருந்து கொண்டிருக்கையில்
உன் உதடுகள் மறுக்கின்ற உண்மையை
நீ உன் வீட்டுக் கண்ணாடியில்
உன் முகம் பார்த்து
உன் அழகிய கண்களிடம் கேள்
அது சொல்லும்…. உள்ளத்து உண்மையை…
கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைக் கலைத் துளிகளைக்
குறித்து வைத்திருக்கிறேன்…..!
குளிர் காய்வதற்கு…!
ஏனென்றால் அது நெருப்புத்
துண்டங்களாய் அல்லவா
என்னைத் தகித்துக் கொண்டிருக்கின்றது…!
நீ தந்த காயங்களின் புண்
ஆறுவதற்கு நான் என்றுமே அனுமதிப்பதில்லை..!
ஏனெனில் அந்த வலிகள்
உன்னை எப்போதும் நினைவூட்டிக்
கொண்டிருக்க வேண்டுமே…அதற்காக…!
உன் நினைவுகளான
எறிந்த சாம்பலில் மீண்டும்
உயிர்த்தெழும் ஃபினிக்ஸ் பறவையாய்
நீயே தான் வருகிறாய்…!
பிறகெப்படி நாம் பிரிந்தோம் என்கிறோம்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.