வசந்தம் பெறுவோம்...!

பிறப்பதும் மண்மேல் இறப்பதும் மண்மேல்
அதற்குள் ஏன்தான் இத்தனை மயக்கம்
அதற்குள் ஏன்தான் இத்தனை கலக்கம்
எங்கோ வந்து எங்கோ செல்வர்
எப்படி எப்படியோ வாழ்வும் முடியும்
எளிதாய் முடியும் வாழ்விலே ஏன்தான்
போட்டியும் வன்மமும் புகுந்தது இங்கு…!
மனதை என்றும் புண்ணாய் ஆக்கும்
புன்மை எண்ணங்கள் ஏனுளம் புகுந்தன
ஏளனப் பார்வை ஏளனப் பேச்சு
எட்டி உதைக்கும் எட்டப்பர் வேலை
ஏன்தான் இவையெலாம்
நம்முள்ளத்தில் வதிந்தன…!
ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் வளர்ந்தோம்!
ஒற்றுமையின்றி நாம் வெறுமையில் பிரிந்தோம்!
விரக்தி நிலையில் வெறுங்கூடாய் ஆனோம்…!
ஆளே இல்லா அனாதை ஆனோம்
இருந்தும் இல்லா நிலையினை அடைந்தோம்..!
அடுத்த தெருவில் நாமிருந்தாலும்
அழுத்த மனத்துடன் முறைத்துக் கொண்டோம்
அன்பாய்ப் பேசலாம் என்று வந்தாலோ
அனலைக் கக்கும் வார்த்தைகள் வீசினாய்!
அன்பை முறித்து அடுப்பிலும் வைத்தாய்
அதில்தான் உனக்கு என்ன ஆனந்தம்
அதிலும் உனக்கு ஆனந்தம் என்றால்
அதனையும் ஏற்பேன் இதயம் மகிழ…!
அன்பு காட்டிய அகமே இன்று
அனலைக் கக்கும் இடமும் ஆனதே
வன்மம் வைத்தே வன்மம் வைத்தே
வாழ்வைத் தொலைத்து நின்றோமே!
வன்மம் யாரையும் வாழவிடாது
வன்மம் கொண்டவர் வீழ்ந்தேபோவர்
வன்மம் வலிமையை இழக்கச் செய்யும்
வன்மம் ஒற்றுமை குலைத்திடும் கருவி
வன்மம் போற்றி வன்மம் போற்றி
வாழ்வில் நாம்தான் பெற்றது என்ன?
வாழும் வாழ்வை வன்மம் கொல்லும்
மனதில் வன்மம் நெருப்பைக் கொட்டும்
வளமான வாழ்வில் வன்மம் வேண்டாம்
வன்மம் விட்டு வசந்தம் பெறுவோம்
வாழ்வே வசந்தமாய் என்றும் மாறும்….!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.