மாறாத எழில்...
வானத்திலே பவனிவரும்
வட்டநிலா அழகுகண்டு
வியந்துநானும் நின்றே விட்டேன்,
வகைவகையாய் விண்மீன்கள்
வனப்புடனே கண்சிமிட்டும்
விதம்கண்டு விழித்து நின்றேன்...
காலையிலே உதித்துயெழும்
கதிரவனின் அழகுகூறக்
கோடிக்குமேல் பாடல் வேண்டும்,
மாலையிலே மஞ்சளாகி
மேலைக்கடல் மூழ்குமவன்
மேனிகண்டு மலைத்து நின்றேன்...
மலையருவி நிலமகளை
முத்தமிடும் அழகுகண்டு
மெய்மறந்து நின்றேனம்மா,
மாதரசி இயற்கையவள்
மானிடர்க்குக் காட்டுமெழில்
மாறாது நிலைத்தே நிற்கும்…!
காட்டாறு நிலமகள்தன்
கட்டுடலின் மேடுபள்ளம்
கைதடவிக் காதல் மூட்டும்,
கரையோர மரக்கிளைகள்
காதலாலே கைநீட்டக்
கண்டவெள்ளம் வெட்கி யோடும்...
பூசுமந்த மரமெல்லாம்
பார்த்த காதல் அரங்கேறப்
பூச்சொரிந்து வாழ்த்துச் சொல்லும்,
வீசுகின்ற தென்றலிலே
ஓசையின்றித் தலையசைத்து
வாழ்த்தியேத்தும் செடிகொடி யெல்லாம்...
மலர்சுற்றி வண்டுபாடி
மகரயாழின் இன்னிசையால்
மங்களத்தை எங்கும் சேர்க்கும்,
மாதரசி இயற்கையவள்
மானிடர்க்குக் காட்டுமெழில்
மாறாது நிலைத்தே நிற்கும்…!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.