பிறவிப்பயன் அடைய வேண்டாமா?

உண்மையாய் உழைக்காத உலுத்தர்களும்
உலகில் உண்மைக்குப் புறம்பாக நடப்போரும்
உண்மையை மறந்தென்றும் திரிவோரும்
உண்மையை மறைப்பதற்கு முயல்வோரும்
உன்மத்தம் பிடித்திங்கே அலைவாரே!
கடமைகளிருக்க கனவுலகில் திரிவோரும்
உடமைதனை மறந்து கயமைத்தனம் புரிவோரும்
கடமை செய்யாது மடமையில் உடழல்வோரும்
உடமை செய்வோரைக் கவிழ்க்க நினைப்போரும்
கடமை தவறியதால் கண்ணிழந்து வாடுவரே!
தன்னைப் போல் பிறரையும் தவறாக நினைப்போரும்
தன்னலமே பெரிதென்று தருக்கி நடப்போரும்
தரங்கெட்டுத் தரணியிலே தன்மானம் இழப்போரும்
தான்தான் எனக்கூறி தலைக்கனத்தில் உழல்வோரும்
தனையிழந்து தனமிழந்து தலைகுனிய வாழ்வாரே!
உள்ளத்தில் கள்ளம் வைத்து உறவாடித் திரிவோரும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரும்
உள்ளவற்றைச் செய்யாது உரிமையைக் கோருவோரும்
உள்ளம் நிறைய விஷம் வைத்திருப்போரும்
உள்ளம் நொந்து போவாரே உண்மையிது உண்மையிது
நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கும் நெறியிழந்து நடப்போரும்
நேர்மைமிகு மண்ணில் என்றும் நிலையிழந்து திரிவாரே!
வஞ்சகம் நெஞ்சைக் கெடுக்க வழியற்றுப் போவாரே!
பிறர் நோகும் செயல்விடுத்து பிறழ்கின்ற நெறிவிடுத்து
பிறன் கெடுக்கும் எணம் விடுத்து
பிறன்கோளும் சொல்ல வேண்டாம்
பிறன்கேடும் சூழ வேண்டாம்
பிறக்கின்ற நாளிளெல்லாம்
பிற்போக்கு எண்ணம் விடுத்து
பிறர் வாழ வழி வகுத்துச் சிறு
பிள்ளை மனம் கொண்டு நாளும்
பிறர் போற்ற வாழ்ந்திடுவோம்
பிறவிப் பயன் அடைந்திடுவோம்!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.