அந்த நாளும் வந்திடாதோ...?

கள்ளமின்றி அத்தனை பேரும்
அன்பாய் அமர்ந்து
அத்தனை கதையும் அடுக்கடுக்காகப்
பேசி மகிழ்ந்த அந்த நாள்கள்...
குழந்தைகள் வந்து
கூடி ஓடி விளையாடிக் களிப்பர்
புன்செய்க் காட்டில் புழுதியடித்துப்
பயறு வகைகள் பலப் பல விதைப்பர்
பயத்தங்காயும் கடலைக் காயும்
பச்சைப் பயறும் தட்டைப் பயறும்
பச்சையாய்ப் பறித்துத் தின்ற நாள்கள்...
திருநாள் வந்தால் ஒவ்வொரு வீட்டிலும்
கூட்டங் கூட்டமாய்
உறவும் நட்பும் கூடி மகிழ்வர்...
திண்பண்டங்கள் வகைவகையாய்
வீட்டுக்கு வீடுப் பறிமாறிக் கொண்ட
மறக்காத நாள்கள்…
மாப்பிளே, மச்சான், அண்ணே, தம்பீ...
அக்கா, தங்கை, சின்னம்மா, சித்தப்பா,
அப்பத்தா, அப்பச்சி, அம்மத்தா, ஐயா,
பாட்டன், பாட்டி, பெரியம்மா, பெரியப்பா
சின்னத்தை, பெரியத்தை, சின்ன மாமா,
பெரிய மாமா, கொழுந்தன்,கொழுந்தியாள்
என்று எத்தனை உறவுகள்
எத்தனை பந்தங்கள், எத்தனை இதயங்கள்
அத்தனை உறவும் அன்பால் இணைந்தவை...
அந்த நாள்கள்... அழகான நாள்கள்...
உறவுகள் உவப்பாய்க்
கூடிய நாள்கள்... உன்னத நாள்கள்...
பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தவுடன்
வறுத்த கடலையை
ஓலைக் கொட்டானில் போட்டு
ஒடைச்சுத் தின்னுடான்னு
ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து
பங்கு வைத்துக் கொடுக்கும்
பாசமிகுந்த எங்கள் அம்மா...!
வீட்டில் அனைவரும்
பாசம் தவழப் பழகிய நாள்கள்...!
ஊருல ஒரு வீட்டில்
விசேஷம் என்றால் எல்லோரும் சென்று
ஆளுக்கொரு வேலையாகப் பார்த்து
அங்கேயே உண்டுறங்கி
விசேஷம் முடிந்தவுடன்...
சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்த
வசந்தம் பொங்கிய வளமிகு நாள்கள்...
பக்கத்து வீட்டினில் துன்பம் என்றால்
அவர்களின் துன்பம் துடைக்கும்
தூணாய் இருந்தோம்...
துன்பம் மீட்டு துணையாய் இருந்து
துன்பத்தைப் பகிர்ந்த இன்ப நாள்கள்...
அந்த நாளில் சாதிகள் இருப்பினும்
பேதியைக் கொடுக்கும் வெறித்தனம் இல்லை...
திருவிழாக்களில் சாதிகள் இல்லை…அரசியல் இல்லை...
வீட்டு விசேஷத்தில் சாதிகள் இல்லை...
நேசம் மட்டுமே நெஞ்சில் இருந்தது...
வேஷம் இல்லை…விஷமமும் இல்லை...
வெகுளியாய்ப் பழகிய பண்புறு நாள்கள்...
முழு நிலவு நாளில் இரவு முழுக்க
ஓடியாடிப் பாடித் திரிந்தோம்…
பெரியோர் எல்லாம் ஓரிடத்தில்
கூடியிருந்து ஊர்க்கதை பேசினர்...
மழை இல்லை என்றால்
வீட்டுக்கொருவர் வீதிதோறும் உள்ள
வீடுகளுக்குச் சென்று தருமக் கஞ்சி வாங்கி வந்து
பிள்ளையார் கோவிலின் பின்புறந்தன்னில்
படைப்புப் போட்டுப் பானை உடைத்து
மழை பொழிய வேண்டுமென இறைவனிடம்
அனைவரும் வேண்டி அழுதோம்…
பெரியோர் வந்து தண்ணீர் தெளித்துப்
பிள்ளைகளா.பிள்ளைகளா…
மழை வந்திருச்சு வீட்டுக்கு வாங்கண்ணு
ஊரு நலத்துக்காக ஒன்றாய் இருந்த
உயர்வான நாள்கள்...
விடுகதை போட்டு வினோதங்கள் பேசி
கதைகளைச் சொல்லிக்
களிப்புடன் நாமும் வாழ்ந்த நாள்கள்...
கிளித்தட்டு, சாதா கிட்டி, ராஜக் கிட்டி,
குண்டு உருட்டல், ஓடிப் பிடித்தல்,
நொண்டி, பாப்பா நொண்டி, பச்சக் குதிரை,
கண்ணா மூச்சி, பள்ளாங்குழி, ஒத்தையா ரெட்டையா
சடுகுடு, கோக்கோ, கிளிவருது கிளிவருது,
ஆடு புலி ஆட்டம், தயாம், பரமபதம், கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
நண்டூருது நரியூருது, உப்புக்குத்தல், பம்பரம் விடுதல்,
குத்துக்கட்டைப் பம்பரம், வட்டியில் தீயெரிதல்,
எறிபந்து எறிதல், பரங்கிப் பழம் பழுத்தல் என்று
அத்தனை விளையாட்டுக்கள் ஆடிப் பாடி
ஓடி மகிழ்ந்த அற்புதமான அழகான நாள்கள்...
ஊர்க் குளத்தில் தண்ணீர் நிரப்ப
வீட்டுக் கொருவர்
மண்வெட்டியுடன் வந்து
மண்ணை வெட்டி வாரியை
நன்கு சுத்தம் செய்து...
மழைக்கு அனைத்தையும்
தயார் செய்த தயை மிகு நாள்கள்...
ஊரின் நலமே பெரிதென மதித்தோம்…
பணத்திற்கு ஆசைப் பட்டு
குளத்தை கண்மாயைக் காடு வயலை
அனைத்தையும் தூர்க்கும்
வெறிபிடித்த மனிதர்களில்லை...
ஒவ்வோராண்டும் குளங்களும்
கண்மாய்களும் ஊரார் அனைவராலும்
தூர்வாரப் பட்டது
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பங்கு
மீன் பிடிக்கும் காலங்களில்
அனைவரும் சேர்ந்து மீன்களைப் பிடித்தனர்
வெட்டும் இல்லைக் குத்துமில்லை...
குளத்தைத் தூர்க்கும் குறுகிய எண்ணம்
அன்று யாருக்கும் இருந்தது இல்லை...
அன்பாய்ப் பொதுநலம் பேணிய நாள்கள்...
உயிரை உறிஞ்சிக் குடும்பத்தைக் கெடுத்து
குடியைக் கெடுக்கும் குடியும் இல்லை...
யாராவது ஒருவர் மயங்கிச் சென்று
மதுவருந்தி வந்தால் மானங் கெடப் பேசி
அவரை இழிவாய் நடத்தி ஒதுக்கி வைப்பர்…
குடித்த குடியன் கூனிக் குறுகி இனிமேல்
விளையாட்டாய்க் கூட விஷமாய் இருக்கும்
மதுவை அருந்தேன்…
என்று அனைவரிடமும் மன்னிப்புக் கோரி
மனிதனாய் மாறிய மண்புறு நாள்கள்...
கள்ளத்தனமாய்க் கள்ளை விற்ற
கபடதாரியைப் பிடித்து வந்து
ஊரின் நடுவில் கட்டி வைத்து
கள்ளிருக்கின்ற பானையை உடைத்து
தயை காட்டாது தண்டனை கொடுத்து
ஊரை விட்டுஒதுக்கி வைத்த
ஒப்பற்ற நாள்கள் அந்த நாள்கள்...
தாய் தந்தையரை மதித்த நாள்கள்...
முதியோரில்லம் இல்லா நாள்கள்
தொலைக் காட்சிப் பெட்டிக்கு
வாழும் நாள்களைத் தொலைக்காத நாள்கள்
அத்தனை நேரமும் நமக்கே
சொந்தமாக இருந்தது…
வீடு தேடிவரும் சொந்த பந்தங்களை
விரும்பி வரவேற்று மனம் விட்டுப் பேசி
உறவுகளைப் பலப்படுத்தி
உற்சாகமாய் இருந்த நாள்கள்.
தந்தை, தாய் சொன்னதைக் கேட்டனர்
எங்கே சென்றாலும்
பெரியோரிடம் சொல்லியே சென்றனர்...
வீட்டுக்கு வந்த உறவுகளுடனும்
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி,
அக்கா தங்கை அனைவரும் ஒருங்கூடி
ஒன்றாய் அமர்ந்து சுவைத்துச் சுவைத்து
உண்டு மகிழ்ந்த உன்னத நாள்கள்...
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
அனைவரும் ஒன்றாய் அன்பாய் இருந்தோம்.
ஒருவருக்கு வித்தால் அனைவருக்கும் வலிக்கும்...
பதைத்துத் துடித்துப் பதறிப் போன...
பாசத்துடன் அன்பைப் பகிர்ந்த நாள்கள்...
தனித் தனித் தீவாய் ஆகாத நாள்கள்...
மிட்டாய் ஒன்று சிறிதே ஆயினும்
காக்காய் கடி கடித்துப் பகிர்ந்து உண்ட நாள்கள்...
பண்டிகை நாளில் பெரியோர் காலில்
பணிந்து வீழ்ந்து பாங்குடன் நின்று
வாழ்த்தை மட்டும் பெற்ற நாள்கள்...
அழகாய் இருந்த அத்தனை நாள்களும்...
அன்பைப் பகிர்ந்த அந்த நாள்களும்
மீண்டும் இங்கு வந்திடாதோ...?
மாந்தர் உள்ளம் விரிவாகாதோ…?
பெரியோரைப் பேணும் நாளும் வராதோ...?
அன்பையும் பண்பையும் அழகாய்ச் சொல்லிய
அந்த நாளும் வந்திடாதோ...?
அன்பை மனதில் வார்த்து என்றும்
அமைதியை உலகில் தந்திடாதோ…?
அன்பே ஆட்சி செய்திடாதோ...?
உள்ளத்தை என்றும் விரிவுமாக்கி
உண்மையாய் இருந்து உள்ளதைப் பேசி
தன்னலம் விடுத்துப் பொது நலம் பேணி
அந்த நாள்களை மலரச் செய்வோம்...!
அகத்தில் மகிழ்ச்சியை நிறையச் செய்வோம்...
அகிலம் நமக்கே அன்பாய்த் தோன்றும்
அகிலம் அனைத்தும் சொந்தமாகும்...
அந்த நாளும் வந்தே தீரும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.