உலா வரும் இதயப் பார்வை!

உனது கண்களைப் பார்க்கும்போது
மீன்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது…!
இரண்டு மீன்கள் துள்ளுவதைப் போல்
உன் கண்கள் எனைக் காண
அங்குமிங்கும் துள்ளுகின்றனவே…!
படபடக்கும் உனது விழிகளை
மீன்களுக்கு நான் ஒப்பிட்டதாலோ என்னவோ
நீ எனது விழிகளை என்றும்
நீர் சுரக்கின்ற…
கண்ணீர்க் குளங்களாக்கி விட்டாய்…!
உனது புருவங்கள் வில்லைப் போன்று
வளைந்து இருக்கின்றன…
அதனால்தான் நீ என்னைப்
பார்க்கும் ஒவ்வொரு முறையும்
உனது பார்வை என்ற அம்பு என்
இதயத்தில் பாய்ந்து கொண்டே இருக்கின்றது…
உனது ஒரு பார்வை…
என் இதயத்தில் அம்பாய்ப் பாய…
உனது இன்னொரு பார்வையோ
பார்வை அம்பு துளைத்த காயத்திற்கு
மருந்தை அல்லவா தடவுகிறது…!
உன் பார்வை அம்பு பட்டு என்
இதயம் வலித்தாலும் என்னவோ
உனை என்றும் சுமந்திருக்கும்
என் இதயம் உன் பார்வையாகிய
அம்பையே என்றும் நாடுகின்றது…!
இராப் பிச்சைக்காரன் எப்போது
உணவு கிடைக்கும் என்று
எதிர்பார்ப்பதைப் போன்றும்…!
மழையை எதிர்பார்க்கும்
பயிரைப் போன்றும் என்றும்
உனது மருந்தாகிய பார்வையையே எதிர்பார்க்கிறது…!
எல்லோருக்கும் இதயம் அவர்களது
நெஞ்சக் கூட்டில் இருக்கும்…
ஆனால்…எனது இதயம் என்னவோ
என் எதிரிலேயே தினம் தினம்
உலா வருகிறது…
உலா வரும் என் இதயமே
உனக்குத் தெரியுமா…?
உலகில் இதயமில்லாது இருப்பவர்களில்
நான்தான் முதலில் இருக்கிறேன் என்று…!
இதயத்தில் சுமையை ஏற்றாதீர்
என்று கூறுவர்……ஆனால்…
நானோ உன் மீது எனது
அன்புச் சுமையை ஏற்றி வைத்துவிட்டு
அமைதியாய் அல்லவா
உலகில் உலா வருகிறேன்…!
அதனால்தான் என்னால்
எல்லாவற்றையும் இயல்பாக
எடுத்துக் கொள்ள முடிகிறது…!
உலா வரும் இதயமே
உன்னிடத்தில் ஒன்று மட்டும் கேட்பேன்…!
உலகில் நான் உலாவர
வானத்து நிலாவாய் நின்று…!
நீ என்னையே பார்த்துக் கொண்டிரு…!
அந்தப் பார்வை ஒன்றே போதும்..!
அதுவே எனது வாழ்விற்கு உரமூட்டும்…!
உற்சாகத்தைத் தரும்…
உன்னதத்தைத் தரும்…
உன் இதயப் பார்வை…
நான் உடைந்து போகாமல் என்னை
என்றும் பாதுகாக்கும் கவசமாகும்…
அதனால் உனது காந்தவிழிப் பார்வை…
என்றும் என்மீதே இருக்கட்டும்…
அதில் எந்தன் இதயம் குளிரட்டும்….
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.