இதயப் பயணம்!

என் இதயம் காணாமல் போய்ப்
பல வருடங்கள் ஆகின்றன…
எங்கே என்று நான்
அதைத் தேடுவேன்…!
முதன் முதலில் நான்
என் இதயத்தை வெளியில்
பார்த்த நாள் இன்றும்…
பசுமை நிறைந்த நினைவுகாய்
பசுமரத்தாணி போல…
உள்ளத்தில் பதிந்து விட்டது!
முதலில் பார்த்த இதயம்
வாழ்க்கை முழுதும் இணைந்து விடும்
என்று கருதிய எனக்கு
ஏமாற்றமே மிஞ்சியது!
தீயில் கருகிய மலர்போல எனது
வாழ்க்கை மலரும் வறுமைத்
தீயில் கருகியது…
அத்தீ என் காதலை
வளர்த்ததே தவிர
கருக்கிவிட வில்லை…
மேலும் மேலும் வளர்த்தெடுத்தது…
ஆனால் …..!
காலம் என்ற தேவன்…
கணத்தில் பிரித்துப் பிய்த்துப்
போட்டுவிட்டான்… அதில்
என் இதயம் காணாமல் போய்விட்டது.
என்ன செய்வது…?
இலையும் பூவுமாய்…
மலர்ந்திருந்த மரங்கள்…
இலையுதிர்க் காலத்தில்
அனைத்தையும் இழந்து மொட்டையாய்
நிற்குமே அதுபோன்று
நானும் வெறுமையாய்
நின்றிருந்தேன்…நிற்கதியாய்…
தனிமரமாய்…மொட்டையாய்…
எனினும்…நம்பிக்கை வித்து…
என்னுள் துளிர்த்தது…
என்றேனும் மழைபொழிந்து
மரம் தளிர்ப்பதைப் போன்று
என்னிதயம் என்னைத்
தேடிவந்து என்னைச் சந்திக்குமென்று…
நம்பிக்கை என்னை வாழ்க்கையை
வாழச் செய்தது…
காலமும் உருண்டது…
காட்சியும் மறைந்தது…
பருவங்கள் மாறின…
ஆனால் என்னுள்ளம்…
அப்படியே அவ்விடத்திலேயே
நின்று கொண்டிருந்தது…
மிட்டாய்க் கடையைவிட்டு வரமறுக்கும்
சிறு குழந்தையைப் போல்...
உருண்ட காலத்துடன்
என் இதயத் தேடலும் தொடர்ந்தது…
முன்னெல்லாம் எனது வெற்றிகளை…
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கு
என்னிதயத்திடம் ஓடிவந்து
சிறுவனைப் போல் கூறி
அது கேட்கும் பரிசை
வாங்கிக் கொடுக்க
என்னுள்ளம் துடித்தது…
சோதனைகளின் மத்தியில்
சாதனைகள் தொடர்ந்தன…
வெற்றிக் கோப்பையுடன் ஓடிவந்து
என்னிதயத்தைப் பார்க்கும்போது அங்கு
வெறுமையே மிஞ்சி இருந்தது!
என் வெற்றிகளைக் கூறுவதற்கு
என் இதயத்தைத் தேடித் தேடி அலைந்தேன்…
இறைவனிடம் வேண்டினேன்…
இறைவனே……..! இறைவனே…...!
என்னிதயத்தை நலமாக வைத்துக் கொள்…!
என்றேனும் ஒருநாள் அதனைப்
பார்க்க மட்டும் வாய்ப்பைக் கொடு!
நான் நலமாக இருப்பதைத் தெரிவிக்க…
என்று நாள்தோறும் வேண்டினேன்!
என் வேண்டுதலையும்
தேடுதலையும் கண்ட இறைவன்
என்னிதயத்தை என்னிடம்
திடீரென்று அனுப்பி வைத்தான்…
புதையல் கிடைத்த வறியவன்போல்
என்னிதயத்தைப் பார்த்துப் பரவசமடைந்தேன்!
என்னிதயம் என்றும்
எனக்கு உத்வேகத்தை
அளித்துக்கொண்டே இருக்கும்
ஆண்டுகள் கடந்தாலும்
அது மாறாது
என் வாழ்வில் இணைந்து
பயணிக்கின்றதே…என்ற
நிறைவு என் மனத்துள்…
என் இதயத்துடனான
இந்தப் பயணம்…
புனிதமானது…
பார்வையே வராதோ
என்று நினைத்த குருடனுக்குப்
பார்வை கிடைத்ததைப் போன்று…
கர்ணனிடம் யாசித்து
அவனுக்குக் காட்சி கொடுத்த
திருமாலைக் கண்ட கர்ணன்
வாழ்வின் இறுதியில்
மகிழ்ந்ததைப் போன்று…
என்னுள் மகிழ்ச்சியின் விதைகள்…
தொடரும் என் இதயப் பயணம்
என் இதயத்தை நிறைக்கிறது…
வாழ்க்கையில் எந்த அளவிற்கு
மகிழ்ச்சியாக நாம் வாழ்ந்தோமோ
அதுபோன்று மரணத்தையும்
மகிழ்ச்சியாக எதிர்நோக்க வேண்டும்…
என்ற மைக்கலேஞ்சலைப் போன்று…
என் இதயத்துடனான பயணமும்
தொடரும்…
அதில்
என் வாழ்வும் நிறையும்!
என் இதயமும் மலரும்!!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.