மரங்கொத்திப் பறவை!

மரத்தைக் கொத்திக் கொத்திப்
புழுத்தேடும் மரங்கொத்திப்
பறவையாய் நினைவுகள்…!
பழகிய இடங்கள், பார்வைகள்
சென்ற பக்கங்களெல்லாம்
செல்கின்ற போது
நினைவுகள் மரங்கொத்திப்
பறவையாய் மனதைக் கொத்திக்
கொண்டே இருக்கும்…!
பிறந்த இடத்தையும்
வளர்த்த உறவையும்
பழகிய முகங்களையும்
நடந்து திரிந்த வயல்வெளிகளையும்
கூடித் திரிந்த நண்பர்களையும்
விட்டுவிட்டு முகந்தெரியாத
இடத்திற்குப் புலம் பெயரும்
அகதிபோல்…
உனைப் பிரிந்த நாள்களின்
நினைவுகள் மனதினில்
உலாவந்து மரங்கொத்திப்
பறவையாய் மனதைக்
கொத்திக் காயப்படுத்துகின்றன…!
அந்நிய தேசத்தில் உறவை விடுத்து
உழைப்பைக் கொடுத்து
பிழைக்கும் ஒரு அபலையின்
மனதை அரிக்கும்
வீட்டு நினைவுகள் போன்றும்…
பிறந்த இடம் விட்டுப்
பரதேசம் போய் அலையும்
பரதேசியின் நிலைபோன்றும்
வாழ வகையற்று…
வாழும் நிலையற்று
அடுத்த நிலை என்னவென்றறியாமல்
ஒருவேளை உணவுக்காகக்
காத்திருந்து ஏங்கும்
அகதியின் மனதில்
பவனி வந்து கொண்டிருக்கும்
கடந்த கால வாழ்க்கைச்
சுவடுகள் உள்ளத்தை அரிப்பதுபோல்…
உன் நினைவுகள்
என்னும் மனங் கொத்திப்
பறவை என்னுள் வந்து வந்து
மரங்கொத்தி மரத்தைக் கொத்துவதுபோல்
என் உள் மனதைக்
கொத்திக் கொத்திக் காயப்படுத்துகின்றன…!
மனம் காயப்பட்டாலும்
என் மனம் மட்டும் ஏனோ
அதையே மீண்டும் மீண்டும்
அசை போடுகின்றது…
மரங்கொத்தி மரத்தைக் கொத்திப்
புழுவைப் பிடிப்பதுபோல்
அவை என்மனதில் உள்ள
பழம் நினைவுகளை
மீட்டெடுத்து என்னை
உயிர்ப்புள்ள உயிராக
ஆக்குகிறது…!
ஆம்! வலியும் சுமைதான்
அது சுவையுங் கூட…!!
மரங்கொத்தி மரத்தைக் கொத்தினாலும்
மரம் அதனை விரும்புவதுபோல்
என் மனமும் உன் நினைவுகளையே
என்றும் விரும்புகின்றன…!
ஆம்! என் நினைவுகள்
ஒரு மரங்கொத்திப்பறவைதான்…
எப்போதும் அவை
மனதைக் கொத்திக் கொண்டே இருக்கும்…!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.