தொடரும் கடன்...!

கடன் மனிதன் பிறந்த உடனேயே
தொடங்கிவிடும் ஒன்று
கடனில்லா மனிதர்களே இல்லை...
பெற்ற கடன், வளர்த்த கடன்,
நன்றிக் கடன், பிறவிக் கடன் என்று
கடன்கள் ஒவ்வொரு நாளும் -
பெருகிக் கொண்டே செல்லும்…!
பெற்றோர்க்குரியது பெற்ற கடன்
குழந்தையை வளர்த்தோர்க்குரியது
வளர்த்த கடன்.
தக்க தருணத்தில் தெய்வம் போல் வந்து
யாராவது ஒருவர் செய்யும் உதவி
நன்றிக் கடன்.
எக் கடனையும் அடைத்து விடலாம்…
நன்றிக் கடனை அடைப்பதென்பது
இயலாத ஒன்று…
அதிலும் பிறவிக் கடன் என்பது
எப்போதும் அடைபடாத ஒன்று
இறைவன் பார்த்து ஒவ்வொருவருக்கும்
கொடுக்கும் கடனே பிறவிக் கடனாகும்…
பிறவி ஒழிய ஒவ்வொருவரும்
ஆற்ற வேண்டியது பிறவிக் கடனாம்…
கடன் அடையா விட்டால்
பிறவிகள் தொடரும்…
பிறப்பும் தொடரும்…
பிறப்புத் துன்பமும் தொடரும்…
முன்னர் அடைக்க முடியாத
பிறந்த கடனுக்காக இப்பிறவியல்
நாம் அனுபவிப்பதே பிறவிக் கடனாம்…
அதிலும் சொல்லுக் கடன் என்பது
ரணமானது… செய்வதெல்லாம்
செய்துவிட்டு முகம் சிவக்க…
மனம் குன்றச் சொல்லுவது
சொல்லுக் கடன்…
என் கடன் பணி செய்து கிடப்பதே
என்றார் நாவுக்கரசர்…
அவர் அடைத்தது பிறவிக் கடன்
கடனைச் செய்தே அவர் கடவுளை அடைந்தார்…
ஆண்டவன் அவருக்குப்
பிறவிக் கடனை அடைத்தார்…
கடமையைச் செய்யா மகனைப் பார்த்து
கடன்காரா என்பார் தந்தை…
வாங்கிய கடனை அடைக்கா விட்டால்
கடன் கொடுத்தவர் சற்றும் கலங்காது
கடன்கார நாயே என்பார்…
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவரிடமும் கடன்படுவோம்…
கடன்பட்டார் அன்று கலங்குவர்.
இன்று கடன் கொடுத்தவர் கலங்குவர்
ஆனால் கலங்குவதில்தான் வேறுபாடு!
இராவணன் கூட கடன் பட்டார்
போன்று கலங்கினான்…
அது மானத்திற்காகக் கலங்கிய மனம்…
இன்று ஒவ்வொருவருக்கும் கடன்கள்
பெருகிக் கொண்டே இருக்கின்றன…
ஒன்றைக் கூட அடைக்க
நினைப்பதில்லை இந்த மனம்!
மனிதப் பிறவியில்
எந்தக் கடனும் முழுமையாய்
அடைவதில்லை…யாரும்
அடைப்பதுமில்லை…
அதிலும் நட்புக் கடன் அடைபடாதது…
எதையும் எதிர்பாராது
அன்பை ஒன்றையே எதிர்பார்த்துச்
செய்யும் நடப்புக் கடன்
அடைக்க முடியாததுங்கூட…
அது அன்புக் கடன்…
அன்புக் கடன் தொடர்ந்து வரும்…
துவளாமல் காக்கும்… வாழ்வில்
துளிர்விடச் செய்யும்… எதையும்
துணித்து விடாது… எப்போதும்
துணிவைத் தரும்…
அன்புக் கடனை
அன்பினால் மட்டுமே அடைக்க இயலும்…
அன்பின் வழியது
உயிர்நிலை அன்றோ…?
அன்பால் மட்டுமே
அனைத்தும் நடக்கும்…
அனைத்தும இயலும்…
அன்புக் கடன் எப்போதும்
பெருகிக் கொண்டே இருக்கும்…!
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு மாதிரியான கடன்கள்…
கடனிலே பிறந்து கடனிலேயே வளர்ந்து
மனிதன் கடனிலேயே மடிந்து போகிறான்!
கடன்காரனாகவே மடிகிறான்…
கடன்களை அவன் வெறுத்தாலும்
கடன்கள் மனிதனை வெறுப்பதுமில்லை…
விடுவதுமில்லை…
ஒரு பிறவியல் அடையாத
கடன் மறு பிறவியிலும் தொடர்கிறது…
அடைக்க முடியாதபோது தொடரும்…
மனிதன் கடனாகிப் போன்றான்
கடன் அவனைக் காவு கொள்கிறது…
கடனுக்குத் தப்ப முடியாது
கடனிலேயே மூழ்கி விடுகின்றான்…..
ஒவ்வொரு பிறவியிலும் கடன் தொடர்கிறது…
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.