நகரும் பூ...!
ஒரு நாள் திடீரென்று
படபடக்கும் இறக்கைகளுடன்
ஒரு வண்ணத்துப் பூச்சி
என்னிடம் வந்து…
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்டது…
நண்பரே நண்பரே…
எனக்கொரு ஐயம்…
அதனைத் தமிழ் கற்ற நீர்
தீர்த்து வைப்பீரா…? என்றது.
நானும் அதனைப் பார்த்து…
அழகான வண்ணத்துப் பூச்சியே
என்னால் முடிந்தவரை
உனது ஐயத்தைத் தீர்த்து வைக்க
முயல்கிறேன்...
உனது ஐயத்தைக்
கூறு என்றேன்…
அவ்வண்ணத்துப்பூச்சி
என் முன் வந்து…
எங்காவது பூ நகருமா….? என்றது
நானோ நகராதே என்றேன்…
அதற்கு அவ்வண்ணத்துப் பூச்சி
மீண்டும் உன்னைச் சுட்டிக் காட்டி
ஏன் இந்தப் பூ மட்டும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது? என்றது!
ஆமாம் பூ நகர்கின்றது…!
உடனே வண்ணத்துப் பூச்சியைப்
பார்த்துக் கூறினேன்…
வண்ணத்துப் பூச்சியே
வண்ணத்துப் பூச்சியே
அந்நகரும் பூ
என் இதயங் கவர்ந்த பூ…
அதனிடம் மட்டும் நீ
சென்றுவிடாதே…என்றேன்
இறக்கைகள் படபடக்க
வண்ணத்துப்பூச்சி
என் நகரும் பூவைப்
பார்த்துக் கொண்டே
பறந்து சென்றுவிட்டது…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.