காத்திருக்கும் நினைவுகள்!

சிலர் பணத்தைப்
பத்திரப் படுத்துவார்கள்
சிலர் நகையைப்
பத்திரப் படுத்துவார்கள்.
இன்னும் சிலரோ பத்திரங்களைப்
பத்திரப் படுத்துவார்கள்.
ஆனால் நானோ……!
என் இதயத்தை எப்போதும் வருடும்
உன் இதயத்தையும்
நினைவுகளையும் அல்லவா
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்…!
நீ பார்வையால் எழுதியவை
அனைத்தும் என்னிடத்தில் இன்றும்
பத்திரமாய் இருக்கின்றன…!
என் இதயம் எனும்
பாதுகாப்புப் பெட்டடகத்தில்….
உன் நினைவுகள் …
எனக்கு இதய வலி வரும்போதெல்லாம்
அவ்வப்போது நினைவேடுகளை
புரட்டிப் பார்க்கிறேன்…
உன் நினைவுப் பொக்கிஷத்தை…
திறக்கும்போதே…
என் இதயமும் உடன் திறந்துகொள்கிறது…
கடல் அலைகள் கரைக்கு
வந்து வந்து போவது போல்
நினைவுகள் என்னைக்
கடந்த காலத்திற்கும்
நிகழ் காலத்திற்குமாய்
மாறி மாறி அழைத்துச் செல்கின்றன…!
அந்நினைவுகள் காலங்கள் கடந்தாலும்
அஜந்தா ஓவியங்களைப் போன்றும்
எல்லோரா ஓவியங்களைப் போன்றும்
கடல் மல்லைக் கோவிலைப் போன்றும்
சுகந்தம் போன்றும்
என் மனதை
இனிமையாய் இதமாய் வருடிச் செல்கின்றன…!
அந்நினைவுகள் அனைத்தும் உன்
பளிங்கு உடல் வாசம்…உன்
அழகிய முத்த முறுவலைப் போல…
என்னுள் ஆழமான மனப்பதிவை
அல்லவா ஏற்படுத்துகின்றன…!
ஒவ்வொருவரது நினைவுகளும்
ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்
என்று சொல்வார்கள்…
ஆனால் என் நினைவுகளோ
என்றும் உன்னைச் சுற்றிச் சுற்றி
அல்லவா வருகின்றன…!
நினைவுகள் சுகமானவை…
தனி மனித அந்தரங்கத்துடன்
தொடர்புடையவை…அவை
மனித மன நிஜத்தின் நிழல்…
அதனால்தான் அவற்றை என்றென்றும்
யாராலும் அழிக்க முடியாது…!
நினைவுகள் ஒருவருடைய
தலையெழுத்தையே மாற்றுமாம்
ஆம்... தீய நினைவுகளும் அதில் அடங்கும்…
ஆனால் உன் நினைவுகள் என்னுள்
மிகப் பெரிய பிரளயத்தை உண்டாக்கி
என் வாழ்க்கைத் தரத்தைத்
தரப்படுத்தி விட்டன… ஆம்!
தரணியில் உயர்த்திவிட்டன…!
நமது நினைவுகள் பிறருக்குத் தெரியாது…
ஏனெனில்… சிலருக்குச்
சில விஷயங்கள் தெரியாமலிருப்பதே
நல்லதுதான்… நம் நினைவுகளும்
அப்படித்தான்…!
கவிதைக்குப் பொய் அழகு
என் நினைவுக்கு நீ அழகு…
வாழ்க்கைக்கு பொய் அழகல்ல…
உண்மைகளைப் பிறர் மாற்றினாலும்…
உள்ளத்து நினைவுகளை யாராலும்
மாற்றியமைக்க முடியாது…
எதையும் மறைக்கலாம்...
ஆனால் நினைவுகளை மறைக்கவோ
மறுக்கவோ ஒருக்காலும் முடியாது…
அது இயற்கை ஊற்றைப் போல்
என்றும் இதயத்தில்
ஊறிக் கொண்டே இருக்கும்…
நாம் உதற நினைத்தாலும்
அவை நம்மை உதறிவிட்டுப்
போகாது…நம் நினைவுகளில்
வலம் வருவோர் வரும்வரை
பேருந்துக்காகக் காத்திருக்கும்
ஒரு பயணி போல் நினைவுகள்
எப்போதும் காத்திருக்கும்…….!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.