தொலைந்த வாழ்க்கை!
படித்து முடித்து
தூக்கி எறிந்த
பழைய புத்தகம்...
கரையான்களும்
கரப்பான்களும்
கருமி கருமி
வேண்டாமென
விட்டுச் சென்ற
ஒரு சில பக்கங்கள்...
அவற்றில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
அழிந்ததாய் எண்ணிய
ஆனால்
அழியாத கோலங்கள்...
அவை,
பாறையில்
உளி பதித்த
முத்திரைகளாய்
என் மனதில்..!
காலங் கடந்தாலும்
இளமை முதுமையானாலும்
இயற்கை
இன்று செயற்கையானாலும்
செல்லரித்துப் போன
என் நெஞ்சத்தில்
சிதிலமாய்
என் சிறு வயது
நினைவுகள்..!
கிழிந்த உள்ளத்தில்
தையல் தழும்புகள்...
வலியில்லை
ஆனால்,
அவைகள் சொல்லும்
வானளாவிய
வாழ்ந்து முடித்த
வண்ண வண்ணக்
கதைகள்..!
கண்களில் நீர் வருவித்த
கசப்பான தோல்விகள்...
அவைகள்,
இன்றும் இனிப்பாய்
திகட்டாமல்
தித்திக்கும்
தீங்கனியாய்
சிறகடித்துப் பறக்கும்
சிறு பட்டாம் பூச்சியாய்
என் இதயப் பூங்காவில்..!
இனிமை இனிமை
இளமைக் கால
இழந்து போன
இனிய கனவுகள்...
அவை
நிரந்தர நினைவுகளாய்
நிர்கதியாய்
நிழலாட்டமாய்
நிகழ்ச்சி நிரலில்
நீக்கப்பட்ட
நிகழ்வாய்
என்றென்றும்
என் வாழ்வில்..!
நடக்காத
ஆனால்,
நடந்து முடிந்ததாய்
நெஞ்சத்தில்
அசை போடும்
ஆத்மார்த்தமான
அந்தரங்கத்து
ஒரு சிறு
காதல் கதை..!
மயில் முடியால்
மனதை
மென்மையாய்
வருடிச் செல்லும்
தென்றலாய்
அவள் நினைவுகள்..!
நானிலத்தில்
நான் அனுபவிக்காத
ஆனால்,
அனுபவித்ததாய்
என்னையே
ஏமாற்றிக் கொண்ட
அந்த
பழைய
இனிய
இன்பமயமான
கண்ணீரோடு கூடிய
கனவுகள்...
தோல்வியிலும்
துவண்டுவிடாது
கைவிட்டுப் போனாலும்
மனம் கலங்காது
கடந்து வந்த
கரடு முரடான
கட்டாந்தரையில்
காதலி
கால் பதித்த
காதல் தடங்கள்..!
மறக்க வேண்டும்...
கரையான்களும்
கரப்பான்களும்
கருமி கருமி
பழைய புத்தகத்தை
காணாது செய்ய வேண்டும்...
பஞ்சணையில்
தூக்கம் கெடுக்கும்
பழைய இனிய கதைகள்
கழிவறையில்
மலமும் ஜலமுமாய்
மாயமாய்
மறைய வேண்டும்..!
- பாளை.சுசி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.