இது தேர்தல் காலம்!
கரையேறிவிடலாம் என்று நம்பி
கறையாக்குகிறோம்
கரத்தை...!
வரவேண்டும் உயர்ந்த வாழ்வென்று
வரைமுறையில்லாமல் வீசுகிறார்கள்
வாக்குறுதிகளை...!
வெட்டப்படும் ஆட்டின் முன்னே
நீட்டப்படும் தழையாய்
இலவச இனிப்புக்கள்...!
மறந்துவிடும் மக்களை
மனதில்கொண்டு
மீண்டும்மீண்டும் படங்காட்டும்
வளர்ச்சித் திட்டங்கள்...!
கரைவேட்டிகளை மாற்றிக் கட்டி
காசுக்கும் சொகுசுக்கும்
கடலெனத் திரளும்
தற்காலிகத் தொண்டர்கள்...!
விதம்விதமாய் முகமூடிகள்,
வித்தியாசமாய்க் கூட்டணிகள்...!
புன்னகைக்கும் எரிமலைகள்,
என்னென்னவோ ஏமாற்றுக்கள்...!
இப்படி
எல்லாம் தெரிந்தும்,
கரையேறிவிடலாம் என்று நம்பி
கறையாக்குகிறோம்
கரத்தை...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.